பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

பஞ்ச தந்திரக் கதைகள்

பறந்து சென்று மழையில் நனையாத சிறு சுப்பிகளைக் கொண்டு வந்து மரத்தடியில் போட்டு, ஓர் எரிகிற கொள்ளிக் கட்டையும் எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு நெருப்பு மூட்டியது, இவ்வாறு வேடன் குளிர் காய உதவிய ஆண்புறா. ‘ஐயா நீங்கள் பசியாயிருக்கிறீர்கள் போலிருக்கிறது! என்னை உண்ணுங்கள்?’ என்று சொல்லிக் கொண்டே எரிகிற நெருப்பில் விழுந்து விட்டது.

இரண்டு புறாக்கள் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்த வேடனுக்குத் திடீரென்று ஆண்புறா தீயில் விழுந்ததைக் கண்டதும். மனம் கசிந்து விட்டது. தனக்காக உதவிபுரிய முற்பட்ட அதன் உடலை அவன் தின்ன விரும்பவில்லை. மேலும், அதன் துணையான பெண் புறாவைப் பிடித்துக் கொண்டு போகவும் விரும்பவில்லை. அதாவது உயிர் வாழட்டும் என்று கூட்டைத் திறந்து விட்டான். பெண்புறா வெளியில் வந்தது. ஆனால் மேலே பறக்கவில்லை. தன் கணவனில்லாமல் தான் மட்டும் உயிர் வாழ்வதா என்று ஆண்புறா விழுந்த அந்தத் தீயிலேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது.

அன்பே உருவான அந்தப் புறாக்கள்சாவதற்குத் தான் காரணமாக இருந்ததை எண்ணி அந்த வேடன் மிகவும் வருந்தினான்.