பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

பஞ்ச தந்திரக் கதைகள்

முதலையரசன் தன் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு வந்து தங்கியிருந்த முதலையோடு போரிட்டு, அதைக் கொன்றது.

பிறகு அது தன் இடத்தில் இருந்து கொண்டு முதலைகளுக்கெல்லாம் ஓர் ஒப்பற்ற அரசனாக விளங்கிப் பல நாட்கள் இன்பமாக வாழ்ந்தது.


2. பாம்புடன பழகிய தவளை

ஒரு நீர் நிலையில் ஒரு தவளை இருந்தது. அந்நீர்நிலையில் இருந்த தவளைகள் அதனோடு ஒற்றுமையாக இல்லை. மேலும் அதைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தன. இதனால் வெறுப்படைந்த தவளை, மற்ற தவளைகளின் மேல் ஆத்திரம் கொண்டு, ஒரு பாம்புடன் போய்ப் பழகத் தொடங்கியது. தன் நண்பனாகி விட்ட அந்தப் பாம்பைப் பார்த்து, ‘இந்தத் தவளைகளையெல்லாம் விழுங்கி விடு’ என்று கூறியது. பாம்பும் அவ்வாறே தனக்குப் பசித்த போதெல்லாம் தவளைகளைப் பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது. தன் எதிரிகள் சாவதைக் கண்டு, அந்தத் தவளை மன மகிழ்ச்சி கொண்டிருந்தது.

பாம்பு விழுங்கி விழுங்கித் தவளைகளெல்லாம் ஒழிந்து போய் விட்டன, கடைசியில் இந்தத் தவளையின் குடும்பம் ஒன்றுதான் மிஞ்சியது. எல்லாரும் ஒழிந்தார்கள் என்று இந்தத் தவளை களிப்புற்றிருக்கும் நேரம் பாம்பு அங்கே வந்தது.