பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

பஞ்ச தந்திரக் கதைகள்

ளாமல் மூடத்தனமாக ஓடி வந்து விட்டாய், நல்ல நண்பன் ஒருவன் அமைச்சனாகக் கிடைத்தானே என்ற மகிழ்ச்சியால் உன்னைக் கட்டித் தழுவிக் கொள்ள வந்தான் சிங்க மன்னன். நீ பயந்தோடி விட்டாய். தானாக வரும் செல்வத்தை யாராவது தள்ளி வைப்பார்களா? உன் தலைவிதி இப்படியா இருக்க வேண்டும். உடனே புறப்படு. நான் சொல்வதைக் கேள். நலம் வரும்" என்று கூறியது நரி.

கழுதை இப்போது நரியை முற்றிலும் நம்பி விட்டது. அதைத் தொடர்ந்து சென்றது. நரி அதைக் கூட்டிக் கொண்டு வந்து சிங்கத்தின் முன் விட்டது.

கழுதையைக் கண்டதும் சிங்கம் மறுபடி எழுந்து பாய்ந்து கட்டித் தழுவிக்கொண்டது. அப்படியே கட்டிப் பிடித்தவாறே அதன் கழுத்தை முறித்துப் போட்டது.

"நரியமைச்சனே, இப்பொழுது கழுதையைக் கொன்ற பாவம் தீரச் சந்தியாவந்தனம் செய்துவிட்டு வருகிறேன். வந்தபின் வயிற்று நோய்தீர நல்ல மருந்தான அதன் ஈரலை எடுத்துக் கொள்கிறேன். அதுவரை நீ இந்தக் கழுதைக்குக் காவலாக இரு’’ என்று சிங்கம் கூறியது.

நரி காவல் இருந்தது. சிங்கம் சந்தியாவந்தனம் செய்ய ஒரு நீர் நிலைக்குச் சென்றது.