பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கீரிப் பிள்ளையைக் கொன்றான்

197


மற்ற பார்ப்பனர்கள் சிரார்த்த தட்சணைகள் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள்; தனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடும் என்று பார்ப்பனன் உடனே புறப்பட்டான். வீட்டில் பிள்ளைக்கு வேறு துணையில்லாததால், தான் வளர்த்த கீரிப் பிள்ளையைக் கொண்டு வந்து, தன் பிள்ளையின் பக்கம் வைத்துவிட்டு அரண்மனைக்குச் சென்றான்.

அரண்மனையில் சிரார்த்தம் முடித்து, அங்கிருந்து பெற்ற சரிகை வேட்டி, அரிசி, பருப்பு எல்லாவற்றையும் மூட்டைகளாகக் கட்டிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான்.

அவன் அரண்மனை போய்த் திரும்பி வரு முன்னால் வீட்டிற்குள் ஒரு கருநாகம் புகுந்தது. அது குழந்தையிருந்த இடத்தை நோக்கிச் சென்றது. அதைக் கண்ட கீரிப்பிள்ளை உடனே கருநாகத்தின் மேல் பாய்ந்து, அதைக் கடித்து இரண்டு துண்டாக்கிப் போட்டு விட்டது. அதன் வாயெல்லாம் இரத்தம் ஒழுகத் தன் சாதனையைக் காட்ட வேண்டும் என எண்ணி, மிகுந்த மகிழ்ச்சியோடு, அது வீட்டு வாசலில் வந்து நின்றது. அரண்மனையிலிருந்து திரும்பி வந்த பார்ப்பனன் இரத்தம் ஒழுகும் வாயோடு நின்ற கீரிப்பிள்ளையைக் கண்டதும் அது தன் குழந்தையைத்தான் கடித்து விட்டது என்று நினைத்துக் கொண்டு அதைத் தடியினால் அடித்துக் கொன்று விட்டான். தன் பிள்ளை என்ன ஆயிற்றோ என்ற கலவரத்தோடு அவன் வீட்டிற்குள் வந்தான்.