பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பஞ்ச தந்திரக் கதைகள்

வராமல் காப்பாற்ற வேண்டிய வழிகளைச் செய்ய வேண்டியது என் கடமை என்று தோன்றியது. தங்களுக்கு நேரான புத்தி சொல்லி, செய்யவேண்டியதைச் செய்யும்படி செய்து விட்டால்தான், பகைவர்கள் ஒழிவார்கள் என்று உறுதி கொண்டேன். நல்ல ஆலோசனைகள் சொல்லி அரசனுடைய மயக்கத்தை அகற்றுவதும், தகுந்த சூழ்ச்சிகளைச் செய்து பகைவர்களை அழிப்பதும், முன்னோர்கள் இயற்றி வைத்த ஆட்சி நூல் முறை தப்பாமல் அரசாளச் செய்வதும் அமைச்சர்களின் கடமையல்லவா? அதனால் தான் நான் இனி மேலும் சும்மாயிருக்கக் கூடாதென்று துணிந்து வந்தேன். அரசே, தாங்கள் பழைய சேனை அமைச்சரை விலக்கிவிட்டு, இந்தக் கொம்பு மாட்டை அந்தப் பதவியில் வைத்துக் கொண்டீர்கள். தாங்களோ அதனிடம் நட்புக்கொண்டு, அன்பினால், அதை உயர்ந்த இடத்தில் வைத்தீர்கள். ஆனால் அந்தப் பொல்லாத மாடோ, தானே இந்தக் காட்டை அரசாள வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கு எப்போது வேளை வரும் என்று காத்திருக்கிறது!"

இதைக் கேட்டதும் சிங்கத்திற்குச் சிரிப்பாக வந்தது.' சே! என்ன வார்த்தை சொன்னாய்? அந்த எருது என்னிடம் வந்து சேர்ந்த போது என்னிடம் என்றும் நட்பாக இருப்பதாக ஆணையிட்டுக் கூறியதே தன் வாக்குறுதியை மீறி அது என் அரசைத் தரன் ஆள நினைக்குமா? ஒருகாலும் அப்படியிருக்காது’ என்று மறுத்துக் கூறியது.