பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2. பொரிமாக் குடத்திலே இழந்த போகம்

ஒரு நகரத்தில் ஒரு பார்ப்பன இளைஞன் இருந்தான் அவன் தாய் தந்தையற்றவனாகையால் ஏழையாக இருந்தான். தரித்திரனான அவனுக்கு யாரும பெண் கட்டிக் கொடுக்கவில்லை.

அவன் ஒரு நாள் ஒரு சிரார்த்தத்திற்குப் போயிருந்தான். அரைத்த பொரிமாக் குடம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. பருப்பும் சோறும் நன்றாகச் சாப்பிட்டு விட்டுச் சிரார்த்தப் பொருள்களை எடுத்துக் கொண்டு மற்றோர் ஊருக்குப் புறப்பட்டான். வயிறு நிறையச் சாப்பிட்டிருந்ததால் ஒரே மயக்கமாக இருந்தது. ஆகையால் வழியில் ஒரு நிழலில் களைப்பாறத் தங்கினான். மணல் தரையில் சாய்ந்து கொண்டிருக்கும் பொழுது அவன் மனத்தில் கோடி வகையான எண்ணங்கள் உண்டாயின.

இந்தக் குடத்திலிருக்கும் மாவை விற்றால் ஓர் ஆடு வாங்கலாம். அந்த ஆட்டை மேய்த்து வளர்த்தால் அது இரண்டு குட்டிகள் போடும். அந்த இரண்டில் ஒன்றைப் பொலி கடாவாக வளர்த்து அதை விற்றால் இரண்டு பெண் ஆடுகள் வாங்கலாம். கையில் இருக்கும் நாலு ஆடுகளும் இரண்டிரண்டு குட்டி போட்டால் மொத்தம் பன்னிரண்டு ஆடுகள் சேர்ந்து விடும். இந்தப் பன்னிரண்டு ஆடுகளையும் விற்று இரண்டு பசுக்கள் விலைக்கு வாங்குவோம்.