பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


3. கழுமரமேறிய நாவிதன்

ஒரு நகரத்தில் ஒரு வணிகன் இருந்தான். அவன் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள். அந்தப் பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்றும், அவன் தாய் தந்தையர் விரைவில் இறந்து விடுவார்கள் என்றும், அவன் முதலில் ஏழையாக இருப்பான்; பின்னால் பெரும் பணக்காரன் ஆவான் என்றும் சோதிடர்கள் சொன்னார்கள். இதைக் கேட்ட வணிகன் அந்தப் பிள்ளையின் மேல் வெறுப்படைந்து அதை வெளியில் தூக்கி எறிந்து விட்டான். பிள்ளையை இழந்த சோகத்தில் அவன் மனைவி மூர்ச்சையாகி இறந்து போனாள். அருமை மனைவி இறந்த பிறகு இனி நமக்கு என்ன வாழ்வு இருக்கிறது என்று வருந்தி வணிகன் தற்கொலை செய்து கொண்டான்.

இதையெல்லாம் கேள்விப்பட்ட அரசன் அவர்கள் சொத்துக்குரியவர்கள் யாரும் இல்லாததால் அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு விட்டான். வணிகன் பிள்ளையைக் குப்பையில் எறிவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு வேலைக்காரி. எல்லாம் முடிந்த பிறகு குப்பை மேட்டில் போய்ப் பார்த்தாள். சாக வேண்டிய காலம் வராததால் அது அப்பொழுதும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அதன்பால் இரக்கப்பட்டு அவள் தன் வீட்டுக்குத் தூக்கிச் சென்றாள். தான் வேலை பார்த்துச் சேர்த்த கூலியில் ஒரு பகுதியைக் கொடுத்து ஒருத்தியைப் பால் கொடுக்க ஏற்பாடு செய்தாள். வேலைக்காரி