பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

பஞ்ச தந்திரக் கதைகள்

சிலைகளாக மாறி விட்டார்கள். அவர்களை வீட்டில் வைத்துப் பூசை செய்து வேண்டிய செல்வங்களைப் பெற்றான். .

அவனுக்குத் தலை மழித்து விட்ட நாவிதன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். உடனே தானும் மொட்டை அடிததுக் கொண்டு தன் வீட்டு வாசலில் காத்திருந்தான். அங்கு யாரோ மூவர் பிச்சைக்கு வந்தார்கள். அவர்களை நாவிதன் தடியால் அடித்தான். வலி தாங்காமல் அவர்கள் மூவரும் உயிரை விட்டுப் பிணமானார்கள். அரச காவலர்கள் வந்து நாவிதனைப் பிடித்துக் கொண்டு போய்க் கொலைக் குற்றத்திற்காகக் கழுவேற்றி விட்டார்கள். ஆகவே எதையும் தீர விசாரியாமல் செய்யக் கூடாது.


4. ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு

ஓர் ஊரில் ஒரு வேதியன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான் வேதியன் தன் மகனை அடிக்கடி கோபித்துக் கொண்டான். ஒரு நாள் கூட மகனிடத்தில் இன் முகத்தோடு பேசியது கிடையாது. இதனால் வெறுப்படைந்த மகன், தன் தாயிடம் போய், 'அப்பா எப்பொழுதும் என் மேல் காய்ந்து விழுகிறார், எங்காவது பிற நாட்டிற்குச் சென்று பிழைத்துக் கொள்கிறேன்’ என்று கூறி விட்டுப் போய் விட்டான். நடக்க நடக்க அவனுக்கு ஆத்திரம் அதிகமாகியது. தன் தந்தையைக் கொன்று விட்டால்தான் தன் மனக்