பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

பஞ்ச தந்திரக் கதைகள்

'உங்கள் தலையில் உள்ள இந்தத் திரிச் சீலைகளோடு இமயமலை நோக்கிச் செல்லுங்கள். போகும் வழியில் யாருடைய தலையிலுள்ள திரிச்சீலை எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் அவனுக்குக் கிடைக்க வேண்டிய பொருள் கிடைக்கும்.'

யோகியின் சொற்படியே அவர்கள் இமயம் நோக்கிப் புறப்பட்டார்கள். போகும் வழியில் முதலில் ஒருவனுடைய தலையிலிருந்த திரிச்சீலை நழுவிக் கீழே விழுந்தது. அவன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது பூமியின் கீழே ஏராளமான தாமிரம் கிடைத்தது. அவன் அதை மற்ற மூவருக்கும் காட்டி, 'வாருங்கள் எல்லோரும் பங்கு வைத்துக் கொள்வோம்' என்றான். அதற்கு அவர்கள் வேண்டாம், வெறுந் தாமிரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எல்லாவற்றையும் நீயே எடுத்துக்கொள்’ என்று சொன்னார்கள். ஆண்டவன் கொடுத்தது இதுவே போதும்’ என்று அவன் தாமிரத்தை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பி விட்டான்.

மற்ற மூவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஓர் இடத்தில் மற்றொருவனுடைய தலையிலிருந்த திரிச்சீலை விழுந்தது. அந்த இடத்தில் வெள்ளி இருக்கக் கண்டார்கள். அதிக ஆசைபிடித்த மற்ற இருவரும் தங்களுக்கு இதன் மேலும் நல்ல பொருள் கிடைக்கு மென்று நினைத்து, அவனை நோக்கி "எல்லா வெள்ளியையும் நீயே எடுத்துக் கொள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.