பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

பஞ்ச தந்திரக் கதைகள்

ஆனால், அந்தக் கிழட்டுக் குரங்கு மாத்திரம் தன் குடும்பத்துடன் பக்கத்துக் காட்டுக்கு ஓடி விட்டது.

பிறகு ஒருநாள், அரண்மனை வேலைக்காரர்களுக்குள்ளே நடந்த சண்டை பெரிதாகி விட்டது. அவர்களில் ஒரு தீயவன் எதிரிகளின் மேல் கொள்ளிக் கட்டையை எடுத்து வீசினான். அது தவறிப் போய்க் குதிரைச் சாலையின் கூரையில் பட்டு, குதிரைச் சாலை தீப்பிடித்துக் கொண்டது. குதிரைச்சாலை எரிந்ததால், குதிரைகள் எல்லாம் நெருப்புக் காயம் ஏற்பட்டுத் துன்பமடைந்தன. குதிரைக்காரர்கள் அரசனிடம் போய் நிகழ்ந்ததைச் சொல்ல, அவன் மருத்துவரை அழைந்து வரச் செய்தான்.

குரங்கு நெய் இருந்தால்தான் குதிரை நோயைத் தீர்க்கலாம் என்று மருத்துவன் கூறினான். உடனே அரசன் ஊரில் உள்ள குரங்குகளையெல்லாம் பிடித்துக் கொன்று குரங்குநெய் இறக்கிக் கொள்ளும்படி கட்டளையிட்டான். மருத்துவன் குரங்கு நெய் பூசிக் குதிரைகளையெல்லாம் குணப்படுத்தி விட்டான்.

தன் இனமெல்லாம் கொலையுண்டதைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தக் கிழக்குரங்கு அந்த அரசனைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று மனம் பதைத்தது. அந்தப் பெரிய காட்டில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் கொடுமைக் குணம் நிறைந்த பேய் ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணிய அக்கிழக் குரங்கு அதில் இறங்கி,