பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பஞ்ச தந்திரக் கதைகள்

28


உண்மை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அவன் என்னைக் கொன்றுவிட முடிவு செய்து விட்டானா? இது நீதியா? நியாயமா?’ என்று கேட்டது.

‘உனக்கு நமது மன்னன் வணக்கம் சொல்லியதும், உன்னைத் தழுவிக் கொண்டதும், அருகில் வைத்து உபசாரங்கள் செய்ததும் எல்லாம், ஒரு நாள் கொன்று விடலாம் என்ற எண்ணத்தோடு தான்.

‘கடவுள் இருளைக் கடக்க விளக்கைப் படைத்தார். கடலைக் கடக்கத் தோணியை உண்டாக்கினார். ஆனால் தீயவர் நெஞ்சில் உள்ள வஞ்சகத்தைக் கடக்கத் தக்க எதையும் அவர் உண்டாக்க வில்லை.

‘யானையின் வெறியை அங்குசத்தால் அடக்கலாம். வெயிலின் கொடுமையை விசிறியால் தணிக்கலாம். அற்பர்களின் வெறியை அடக்க மட்டும் வழியில்லை. அவர்கள் செத்தால்தான் அது அவர்களோடு சேர்ந்து அழியும்.

'பூவில் இருக்கும் தேனை உண்டு இன்பமாக வாழ்வதை விட்டு, யானையின் மத நீரை உண்ணப் போய் அதன் முறம் போன்ற காதினால் அடிபட்டுச் சாகும் வண்டு. அதுபோல் நல்லவர்கள் பேச்சைக் கேட்காமல், தீயவர்கள் சொல்வதைக் கேட்டு ஒழிந்து போவது துடுக்குடைய அரசர்களின் தன்மை.