பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எருதும் சிங்கமும்

29


‘தீயவர்களின் சேர்க்கையால் நல்லவர்களும் நட்டம் அடைவார்கள்; அதனால் ஒரு நன்மையும் வராது. ஒரு காகம், ஒர் ஒட்டகத்தை அழித்த கதையும் இதைப் போன்றது தான்.

கொடியவர்களோடு கூடியவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் உயிர்விட்டு ஒழிய வேண்டியது தான். மூர்க்கத்தனமுள்ள அரசர்கள் கையில் இறப்பதை விடப் போரில் இறப்பது சிறப்பாகும்.

போரில் உயிர் விட்டால் சுவர்க்கம் போகலாம் இல்லாவிட்டால் இந்த உலகத்தை ஆளலாம். வீணாக, ஒன்றுக்கும் பயனில்லாமல் உயிரை விட்டால், சொர்க்கமும் கிடைக்காது; பூமியும் கிடைக்காது; நரகத்தில் தான் போய்ச் சேர வேண்டும் .

பகைவர்களோடு போரிட்டு இறந்தவர்கள் இறந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். உயிருக்குப் பயந்து கொண்டு உயிரோடு இருப்பவர்கள் வெறும் நடைப் பிணங்களேயன்றி வேறல்லர்.

அறிவில்லாதவர்கள், தங்களுக்கிருக்கும் பலத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களைச் சிறியவர்கள் என்று மதித்து விடுகிறார்கள். இது எப்படியிருக்கிற தென்றால் சிட்டுக் குருவியை அற்பமென்று நினைத்து கடைசியில் கடலரசன் தன் வீராப்பு அடங்கியதைப் போலிருக்கிறது.’ என்று பல கதை களைக் கூறி, நரி காளை மாட்டுக்குக் கோபத்தை உண்டாக்கி விட்டது.