பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பஞ்ச தந்திரக் கதைகள்

யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, 'பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட் டேன்!' என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.

4. தங்களால் தாங்களே கெட்டோர்

முன் காலத்தில் ஒரு சாமியார் இருந்தான். அவன் பெயர் தேவசன்மா என்பது. அவன் பிச்சை யெடுத்துப் பிழைத்து வந்தான். பிச்சை யெடுத்துச் சேர்த்த காசை யெல்லாம் அவன் ஒரு கந்தையில் முடிந்து வைத்திருந்தான். அவன் பணம் சேர்த்து வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை எப்படியோ ஆஷாடபூதி என்ற பார்ப்பனன் தெரிந்து கொண்டு விட்டான். ஆஷாடபூதி ஒரு திருடன் திருடிப் பிழைப்பதே அவன் தொழில். சாமியாருடைய கந்தையைத் திருடி எடுத்துக் கொண்டு விட்டால், பிறகு நாள்தோறும் திருட வேண்டியதில்லை. அந்தப் பணத்தைக் கொண்டு பல நாள் இன்ப வாழ்வு நடத்த முடியும் என்று ஆஷாடபூதி நினைத்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.