பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


6. சிங்கத்தைக் கொன்ற முயல்

ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று இருந்நது அது அந்தக் காட்டில் இருந்த மற்ற விலங்குகளை எல்லாம் கண்டபடி வேட்டையாடிக் கொன்று தின்று கொண்டிருந்தது. இவ்வாறு நாளுக்கு நாள் அதன் வெறிச் செயல் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதைக் கண்ட மற்ற விலங்குகளெல்லாம் ஒன்றாகக் கூடி அந்தச் சிங்கத்தினிடம் சென்றன.

'சிங்கம், இந்தக் காட்டில் உள்ள விலங்குகளை எல்லாம் கண்டபடி வீணாகக் கொன்று கொண்டிருக்க வேண்டாம். இப்படிச் செய்து கொண்டிருந்தால் விரைவில் இந்தக் காட்டில் விலங்குகளே இல்லாமல் போய்விடும். ஆகையால் நாங்கள் இதற்கு ஒர் ஏற்பாடு செய்கிறோம். நாள் ஒன்றுக்கு ஒரு விலங்கு ஆக உனக்கு இரையாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம்' என்றன.

சிங்கம் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது. அதுபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்காக வந்து சிங்கத்திற்கு இரையாகிக் கொண்டிருந்தன.

ஒரு நாள் ஒரு முயலின் முறை வந்தது.' இனி நாம் பிழைக்க முடியாது. இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். இதில் நாம் வெற்றி பெற்றால் காட்டு விலங்குகளை எல்லாம் காப்பாற்றிய பெருமை நமக்குச் சேரும். நாமும் சாவினின்று தப்பலாம்’ என்று அந்த முயல் ஒரு சிந்தனை செய்தது.