கடலை வென்ற சிட்டுக்குருவி
53
அது சொல்லி முடிப்பதற்கு முன்னால், சிங்கம் என்ன சொல்கிறது என்பதையும் எதிர் பார்க்காமல், புலி அதன் மேல் பாய்ந்தது.
சிங்கம் இறந்து போன ஒட்டகத்தின் இரத்தத்தைக் குடித்தது. புலி அதன் மூளையைச் சுவைத்துத் தின்றது. நரி அதன் ஈரலைக் கடித்துத் தின்று மகிழ்ந்தது. காகமோ, தசையைக் கொத்தித் தின்று வயிறு புடைத்தது.
கொடியவர்களுடன் கூடியவர்கள் மடிவது திண்ணம் என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது.
ஒரு கடற்கரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தது ஓர் ஆண் சிட்டு. அந்தச் சிட்டுக்கு ஒரு மனைவிச் சிட்டு இருந்தது. இரண்டும் கடற்கரையில் இருந்த ஒரு செடியின் கீழ் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. பெண் சிட்டுக்குச் சினை ஏற்பட்டவுடன் அது ஆண் சிட்டைப் பார்த்து 'நான் எங்கே முட்டையிடுவது?' என்று கேட்டது.
'எங்கே இடுவது? இங்கேயே இட வேண்டியது தான்! இதைவிட வேறு இடம் நமக்கு எங்கேயிருக்கிறது?’ என்று பதில் சொல்லியது ஆண் சிட்டு.
'கடற்கரையில் முட்டையிட்டு வைத்தால் அலையடித்து கடல் எடுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது?’ என்று பெண் சிட்டுக் கலங்கியது.