பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

பஞ்ச தந்திரக் கதைகள்


'அந்தச் சைவத்துறவி என்னை அடித்து விரட்டும் போது, 'தங்கப் புதையலின் மேல் இருந்து கொண்டு என் சோற்றைத் தின்று கொழுத்த எலியே, இப்போது உன் தங்கம் பறி போச்சே! இன்னும் உனக்கு வெட்கம் இல்லையா?' என்று கேட்டான். அது எனக்கு இன்னும் வேதனையாக இருக்கிறது. அந்த வேதனை நீங்க நீதான் ஒரு வழி சொல்ல வேண்டும். அதற்காகவே உன்னிடம் வந்து சேர்ந்தேன்’ என்று எலி கூறியது.

'கவலைப்படாதே, இந்தக் காகத்திற்கு நீ ஒரு செல்வம் போல உற்ற நண்பனாகக் கிடைத்தாய். நீங்கள் இருவரும் என்னிடம் வந்து சேர்ந்ததே பெரும் பாக்கியம். நட்பாகிய பெரும் செல்வம் நம்மிடம் இருக்கிறது. அதை நமக்குக்கொடுத்த தெய்வத்தை வழிபட்டுக் கொண்டு நாம் நலமாக இருப்போம்’ என்று ஆமை கூறியது.

ஆமை குளத்திலிருந்து மீன்களைக் கொண்டு வரும். காகம் எங்கிருந்தாவது இறைச்சி கொண்டு வரும். எலி ஊருக்குள் போய்ச் சோறு கொண்டு வரும். மூன்றும் ஒன்றாகக்கூடியிருந்து கொண்டு, நாள் தோறும் உண்டு அன்புடன் பேசிக்காலம் கழித்திருக்கும்.

இப்படி அன்போடு அவை ஒன்றாக வாழும் நாளில் ஒரு நாள் ஒரு மான் ஓடி வந்தது. அந்த மான் நடுங்கிக் கொண்டே நின்று, மருண்டு மருண்டு விழித்தது.