பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நான்கு நண்பர்கள்

87


‘சிறிதும் அறிவில்லாத நண்பனே, ஏன் நடுங்கு கின்றாய்? என்று அந்த மூன்று நண்பர்களும் கேட்டன.

‘யமனை யொத்த கொடிய வேடன் ஒருவன், நஞ்சு தோய்ந்த அம்பு கொண்டு என்னைக் கொன்று வீழ்த்த வந்தான். நான் அதற்குத் தப்பி ஓடி வந்தேன். இப்போது நான் உங்கள் அடைக்கலம், என்னை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று அந்த மான் கூறியது.

‘நல்லது. நீ யார், எங்குள்ளவன் என்றெல்லாம் சொல்லு’ என்று அவை கேட்டன.

'எனக்குத் தாய் தந்தையர் யாரும் கிடையாது. சுற்றத்தாரும் ஒருவரும் இல்லை. காடுதான் எனக்கு வீடு. என் மீது அன்பு கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களானால், உங்களையே தாய் தந்தையராகவும், உற்ற சுற்றத்தாராகவும் கொண்டு, என்றும் உங்களைப் பிரியாமல் வாழ்வேன்’ என்று அந்த மான் கூறியது.

அந்த மானின் சொற்களில் உண்மையிருந்தது. எனவே அவை மூன்றும் அதை நம்பின.

‘நல்லது, நீ இங்கேயே எங்களுடன் இரு. இனி நாம் நால்வரும் நண்பர்களாக வாழ்வோம்’ என்று கூறி மானைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டன.