பக்கம்:படித்தவள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ராசீ



இந்த வயதில் ‘டீ’யை ஆறவிட்டு அதைக் குடிக்காமல் மனத்தைச் சிதறவிடும் மனோபாவம் என்னிடம் இருப்பதை நான் உணர முடிகிறது. எனக்கு வயது ஆகிவிட்டது. வேலை வெட்டிக்குஉதவாதவன் என்று நான் ஒதுக்கப்பட்டேன், இதுவும் உண்மைதானே; எத்தனை நாளைக்கு நான் இடம் அடைத்துக் கொண்டு இருப்பது.

என்னை அறியாமல் ‘காயசித்தி’ பைத்தியம் என்னையும் பிடித்துக் கொண்டது. திருக்குறள் படித்துப் பழக்கம். நானாக அதை எடுத்துப் படிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அந்த நல்ல பழக்கம் என்னிடம் என்றைக்குமே இருந்தது இல்லை. படிக்கிற காலத்தில் அதைப் பாடநூலாக வைத்திருந்தார்கள். எந்த வகுப்பிலும் கடன் கொடுத்தவன் விடாமல் தொடர்வதைப் போலத் திருக்குறள் நம்மைத் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதிலிருந்து யாரும் விடுபட முடியாது. அதன் அருமை அப்பொழுது தெரிவதில்லை; இப்பொழுது தெரிகிறது. ஏதாவது குறள் நினைவுக்கு வரும்; அதை நினைத்துக் கொண்டே அசைபோடுவேன்.

சூது என்ற அதிகாரம்; அது தீது என்பதைப் பத்துக் குறளில் கூறுகிறார்.

பொருளை இழக்கும்தோறும் சூதின்மீது விருப்பு அதிகமாகும் என்பது அந்தக் குறளின் கருத்து. அதற்கு அவர் உவமை கூறி இருக்கிறார். உயிர் இழக்கும்தோறும் அதன்மீது காதல் ஏற்படுமாம். அதனை நான் இப்பொழுது உணர முடிகிறது. இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்து விடுவது என்ற ஆசையை அடக்கவே முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/12&oldid=1123424" இலிருந்து மீள்விக்கப்பட்டது