பக்கம்:படித்தவள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

19



“தினந்தோறும் ஒன்று வரும்; தவறாமல் வாங்கி வருவேன்” என்றாள்.

“ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் காசு; அதற்கு நகல் படிவங்கள்; வங்கிக் கேட்பு வரைவோலை; இதற்கே சரியாகப் போய்விடுகிறது. என் படிப்பு அதற்கு ஈடு செய்யமுடியாது. எனக்குத் தெரியாத பொருள்களில் அவர்கள் வினா அமைந்து விடுகிறது; எழுதுகிறேன்; எழுதிக் கொண்டே இருக்கிறேன்” என்று திரைப்படப் பாணியில் இரைச்சல் கலந்து கூறுகிறாள்.

அவள் காலகட்டம் எனக்குப் புரிகிறது. எப்படியாவது ஒரு வேலை வாங்கி விடுவது என்பது அவள் தொடர்ந்த முயற்சிகள் தெரிவிக்கின்றன.

அவளைப் பார்க்கும்போது பரிவு ஏற்படுகிறது.

பேசாமல் யாரையாவது கட்டிக் கொண்டு தொலையக் கூடாதா என்ற எண்ணம் எழுந்தது.

“ஏன்′மா அம்மாகிட்டே சொல்லி உனக்கு”?

“கருமாதி” என்றாள். திருமணத்தில் அவள் ஆர்வம் இச்சொற்களினின்று அடக்கு முறையைக் காண்கிறது என்று தெரிகிறது.

“இதுக்கா இதுவரை படித்தது” என்று இடித்துக் கேட்கிறாள்.

திருமண அழைப்பிதழில் அழகாகப் பட்டங்களைப் போட்டுக் கொள்வது நினைவுக்கு வந்தது.

“கலியாணப் பத்திரிகையில் உன் பேருக்குப் பின்னால் இரண்டு ஆங்கில எழுத்துக்களை மற்றவர்கள் உச்சரிக்கச் செய்ய” என்று விளக்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/21&oldid=1123433" இலிருந்து மீள்விக்கப்பட்டது