பக்கம்:படித்தவள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ராசீ



“அரண் வேறு இல்லை. அவர்கள் நம்பிக்கைகளுக்கு உரம் இடுகிறேன்; அவ்வளவுதான் அவர்கள் உற்சாகமாகத் தம் தொழிலில் ஈடுபடுவார்கள்; திறமை இருக்கலாம்; ஆற்றல் இருக்கலாம்; அறிவு இருக்கலாம்; அது உன்னிடம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தால்தான் அவை முழுவதும் வெளிப்படும்” என்றார்.

“உங்களால் அவர்களுக்கு நன்மை உண்டு என்கிறீர்களா?”

“மக்கள் அதிர்ச்சிகளைத் தாங்க மாட்டார்கள்; நாங்கள் அவர்கள் நஷ்டப்படும்போது அதைத் தாங்கும் மனநிலையைத் தருகிறோம்; கஷ்டப்படும்போது கருத்து அழிய வேண்டாம் என்று அருத்தமுள்ள செய்திகளைச் சொல்வோம். எதையும் துணிந்து செயல்படத் தயங்குவார்கள். அப்பொழுது ‘குருவைத்’ துணைக்கு அழைத்து அவர்கள் அஷ்டமத்துச் சனியனுக்கு விடுதலை தருவோம். அவர்கள் வெற்றி காண்பார்கள். அந்த முடிவுக்கு நாங்கள் தான் விடிவு கூறுகிறோம்” என்று விளக்கினார்.

“மேல் நாட்டில் கூட இப்பொழுது ஜோசியத்தை நம்புகிறார்கள்” என்றேன்.

“நாம் விஞ்ஞானத்தை அவர்களுக்குத் தர முடியாது; இந்த அஞ்ஞானத்தையாவது பரப்ப முடிகிறது. அதற்குப் பெருமைப்படுவோம்” என்றார்.

அவர் உண்மையை ஒப்புக்கொள்வது அவரை நேசிக்கச் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/26&oldid=1123438" இலிருந்து மீள்விக்கப்பட்டது