பக்கம்:படித்தவள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ராசீ



“ஏன் பயப்படுகிறாய்? மறுபடியும் உடைப்பதற்கு ‘பல்பு’ இல்லை என்றா? கவலைப்படாதே. புதிது ஒன்று மாட்டி வைக்கிறேன். நாளை வந்து உடை” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இது மற்றோர் சுவை மிக்க நிகழ்ச்சியாக இருந்தது.

6

பிறைமதி ஒளிவிட வேண்டிய வானம் பண்ணையார் இல்லம் தான் என்று எனக்குப் பட்டது. படித்தவள் வேண்டும் என்று அவர் சொன்னாரே தவிர அவள் பட்டம் பெற்றவளா அதை விட்டவளா என்று திட்டவட்டமாக அவர் தீட்டிக் காட்டவில்லை.

படித்தால் அவள் நாலு காசு கொண்டு வந்து சேர்ப்பாளா அல்லது குணவதியாகக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டத் தேவையா என்பதை அவர் விளக்கவில்லை.

அவசரப்பட்டு நானும் ஆவேசப்படவில்லை. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. நாக்கை அதன் போக்கில் விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது நாவலர் வள்ளுவர் நவின்று உரைப்பது நான் அறியாதது அல்ல. அந்தக் குறளே விசித்திரமானது. ‘காக்க’ என்று வரும் கா என்ற சொல்லை மீண்டும் மீண்டும் ஆளுவது அபாய அறிவிப்பாக இருக்கிறது.

“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/48&oldid=1139511" இலிருந்து மீள்விக்கப்பட்டது