பக்கம்:படித்தவள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ராசீ


என்று பழகிய சிலர் பகர்வது உண்டு. அது உண்மையோ பொய்யோ தெரியாது. எடுக்கப் பிடிக்க வந்தவர்களுக்கு விபத்தின் வரலாறு சொல்லிக் கொண்டிருக்க நான் முன்னிருந்து தலைமை வகித்தேன். சாவு வீட்டில் வந்தவர்களுக்கு எப்படி இறந்தார் என்று சொல்லிக் கொண்டே இருக்கும் பொறுப்பு யாரையாவது சாரும்; அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதால் அவர்கள் குடும்பத்தோடு நெருக்கம் ஏற்பட்டது. கடைசி உறவினர் வந்து அழுது முடிக்கும் வரை அந்த உடல் அசைவது இல்லை என்று அடம் பிடித்தது. வந்தவர்களுக்கெல்லாம் நடந்த நிகழ்ச்சியைச் சொல்லி முடித்தேன். அதனால் அந்தப் பெண்ணின் தாய் என்னைச் சொந்த சகோதரனாக மதிக்கத் தொடங்கினாள்.

அதில் இருந்து ஏதாவது நல்லது நடப்பது நயப்பது ஏதாவது இருந்தால் விசாரிப்பது உண்டு. அவளைப் பெற்றெடுத்தவளுக்கு உற்ற துயரினை மறக்க, கற்ற இந்த மகள் தான் இருந்தாள். தான் படித்தால்தான் முன்னுக்கு வர முடியும் என்பதை நன்கு அறிந்தவளாகையால் கடுமை அவளிடம் அடிமைப்பட்டது.

என்னை எந்தச் சொல்லால் அழைப்பது? அவள் தேர்ந்து எடுத்த சொல் இந்த ‘அங்கிள்’ என்பது. அதில் ஒரு மரியாதை கலந்திருந்தது. என்னை மதிக்கும் உணர்வு பொருந்தி இருந்தது.

அவள் தனியார் நிறுவனத்தில் தக்க இடம் ஒன்று பிடித்ததை அறிந்தேன்.

“நீ ஏன் அரசு ஆட்சியில் மாட்சி பெறக் கூடாது?” என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/80&oldid=1284163" இலிருந்து மீள்விக்கப்பட்டது