பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 T பட்டி மண்டப வரலாறு

அவர்தம் தீர்ப்புதான் தீர்ப்பு என்று பதியும் அளவு திறனுடையது.

சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் இன்றியமை யாத வேண்டுகோளுக்காக நடுவராவார் . அவருக்கென அமைந்த பொழிவுப் பாங்கிலேயே தீர்ப்பும் அமையும்.

முனைவர் மா. நன்னன் அவர்கள் பெரும்பகுதி தி. மு. க. பட்டி மண்டபங்களில் நடுவராக அமைவார். கருத்தில் நாட்டமுள்ள இவர் எளிய நடையில் உரையாற்றி அரிய கருத்துக்களைத் தீர்ப்பிற்குத் துணையாக்கி முடிவு சொல்பவர். .

முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் இப்போது தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக அமர்ந் துள்ளவர் சொற்பொழிவுச் செம்மல் என்னத் தக்கவர் . இவர் தம் நடுவர் பணி தனியொரு பாங்காகக் குறிக்கத்தக்கது. போரிட்டோர் கருத்துக்களைத் தொட்டுக் காட்டி அவற்றிற்கு உரமூட்டுவதாகவும், தொய்வைத் தெளிவிப்பதாகவும் தெளிந்த கருத்துக்களை அவையில் வைத்துத் தீர்ப்பளிப்பவர்.

முனைவர் தமிழ்க்குடிமகனார் உலக வழக்கறிந்த சொல்லாண்மையர், எளிய ஆனால் மரபு வழுவாத மொழி நடை கொண்டவர் . பல்வகைப் பட்டிமண்டபங்களில் அவையோர் ஏற்குமளவில் தீர்ப்பை வடிப்பவர்.

முனைவர் இரா. செல்வக்கணபதி அவர்கள் பட்டி மண்டபங்களில் நடுவராக அமைந்து சிறப்புற்றிருப்பவர் .