பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இல் புலவர் கா. கோவிந்தன் இயலாது. ஆகவே, அவை பெறமாட்டா இடங்களில் அரசர்கள் தங்கள் அரண்களைச் சூழ, அந்த அகழிகளைத் தோண்டி நீர் நிரப்பி வைத்தனர். ஒரு மூச்சில் நீந்திக் கடக்க மாட்டா அகலமும், கால் நிலம் தட்டா ஆழமும், கால் இட்டாரைக் கெளவி ஈர்த்துக் கொள்ளும் முதலைகள் வாழும் கொடுமையும் உடையவாக, அவ்வகழியை ஆக்கி வைத்திருந்தார்கள். "மண் உற ஆழ்ந்த மணி நீர்க்கிடங்கு” (மதுரைக் காஞ்சி: 351), "இரை தேர்ந்து இருவரும் கொடுந்தாள் முதலையொடு திரைப்படக்குழிந்த கல் அகழ் கிடங்கு" (மலைபடுகடாம் 90-9) என அவ்வகழிகள் புலவர் பாராட்டும் பெருமையுடைய வாதலும் காண்க. அகழிக்கும் மதிலுக்கும் இடைப்பட்ட இடமான புற நகர், அரண் மதிலையும், அகழியையும், காவற் காட்டையும் காத்து நிற்கும் காவற்படை பாசறை கொண்டிருக்கும் இடமாகும். பகைவர் படை, காவற் காட்டினை அழிப்பதையும், அகழியைத் துார்ப்பதையும் தடுத்து நிறுத்துவது அரணகத்தில் உள்ள படையால் ஆகாது ஆதலின், அப்பணி, புற நகரில் பாடி கொண்டிருக்கும் படையாளர்பால் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காவற் படையின் வாழிடமாகிய புறநகர், பிறிதொரு வகையாலும் அரணுக்குத் துணை புரிந்தது. அகநகரில் பெய்யும் மழை நீரும் அகநகரத்து மக்கள் தத்தம் மனைகளில் கழித்துவிடும் கழிநீரும் அகழியைச் சென்று அடைவதன் முன்னர்ப் புறநகர் நிலங்களுக்கு வேண்டும் நீர் வளமாக நிறைந்து பயன் தருவதால், அப்புறநகர், அரணகத்து மக்களுக்கு வேண்டும் உணவுப் பொருள் களையும் தந்து உதவிற்று. ஓர் அரணையோ ஒரு நாட்டையோ கைப்பற்றக் கருதும் பகையரசர்கள் தம்