பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 173 கருத்தினை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளும் பல்வேறு செயல் முறைகளுள், அவ்வரணுக்கு உரியாரும், அந்நாட்டிற்கு உரியாரும் உணவும் உண்ணும் நீரும் பெறமாட்டாது கிடந்து வருந்தி வருந்தி, இறுதியில் தம் உயிரினைக் காப்பாற்றிக் கொள்வான் வேண்டித் தாமே வந்து பணியும் வகையில், அவ்வரணையும், நாட்டையும் வளைத்துக் கொண்டு முற்றி நிற்கும் முறையே தலையாய போர் முறையாகும். தனக்குரிய ஆவூர்க் கோட்டையினைத் தான் அகத்தே யிருக்குங்காலை, நலங்கிள்ளி வளைத்து முற்றிக் கொண்டானாகவும், அம்முற்றுகை நெடிது நாள் நீண்டு செல்லவும், புறம்போந்து போரிட நினையாது வாளா கிடந்த நெடுங்கிள்ளிபால் சென்று, "வேந்தே! உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் கிடைக்கப் பெறாமல் யானைகள் வருந்துகின்றன; பால் கிடைக்கப் பெறாமல் பச்சிளங் குழவிகள் கதறிக் கதறி அழுகின்றன. மகளிர் மலர் குடும் மகிழ்ச்சியும் இலராய்க் கூந்தலை வறிதே வாரி முடிக் கின்றனர். வளமனை வாழ்வார் மனைகள் வளம் இழந்து வறுமையுற்றமை கண்டு வாய்விட்டுப் புலம்புகின்றனர். இவற்றை யெல்லாம் கண்டும் கேட்டும், அரணகத்தே வாளா அடங்கிக் கிடத்தல் அறமும் அன்று. ஆண்மையும் அன்று!" என்பன போல்வனவற்றை இடித்துக் கூறிய கோவூர்க் கிழார் கூற்றில், அப்போர் முறையின் இன்றி யமையாமை புலப்படுவது காண்க. "இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ திருந்தரை நோன் வெளில் வருந்தஒற்றி நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து