பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி છું. 175 மலையை வளைத்துக் கொண்ட போது, பாரியின் ஆருயிர் நண்பராம் கபிலர், அம்மூவேந்தர்களைப் பார்த்து, "வேந்தர் பெருமக்களே! பறம்பரணைக் கைப்பற்றுவது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிமையுடையதன்று. அரணகத்து உள்ளார், எத்தனை ஆண்டுகள் ஆயினும் பணிந்து விடுவாரல்லர்; தன்னகத்தே வாழும் மக்கள் வறுமையுற்றுத் தன்னம்பிக்கை இழந்து விடுமளவு வளக் குறைபாடு உடையதன்று பறம்பரண். உழைக்க வேண்டாதே பெறக்கூடிய உணவுப் பொருள்கள் பறம்பரணில் மிகப் பல உள. நெல் விளையும் மூங்கிற் காடுகள் ஆண்டு நிறைய உண்டு; அம்மூங்கில் தரும் அரிசியே அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வரும். பறம்பு மலையெங்கும் பலா மரங்களே காட்சியளிக்கும்; அப்பலா ஒவ்வொன்றும் எண்ணிலாப் பழங்களை அளிக்கும்; மண்ணைத் தோண்டினால், தோண்டுமிடமெங்கும் வள்ளிக்கிழங்குகளே வெளிப்படும்; காணுமிடமெங்கும் காட்சியளிக்கும் தேன் கூடுகளிலிருந்து தேன் தானாகவே வெளிப்பட்டு வழியும். இதனால் உள்ளிருப்போர்க்கு உணவுக் குறைபாடே உண்டாகாது. ஆகவே, வேந்தர்காள்! காணும் மரந்தொறும் களிறுகளைக் கட்டி வைத்திருந் தாலும், போர்க்களம் எங்கும் நெடிய பெரிய தேர்களையே நிறுத்தி வைத்திருந்தாலும் பறம்புக் கோட்டையைப் பணிய வைப்பது இயலாது; போரிட்டுப் பெறுவது உங்களாலும் இயலாது; உங்கள் வாள் வலிக்கு அஞ்சிப், பாரியும் பறம்பரணைப் பணிய வைத்து விடான்!” என்று கூறிய அறிவுரையில், புறநகர் அளிக்கும் வளம், அரண்காப்பிற்கு எத்துணை வலிவுடைத்து என்ற உண்மை வெளிப்பட்டு நிற்றல் உணர்க.