பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 227 கூறுவதாகிய தும்பை என்ற புறத்திணை, கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகிய அவ்விடத்து ஒழுக்கத்தினை உணர்த்துவதாகிய நெய்தல் என்ற அகத்திணைக்குப் புறனாயிற்று என்க. கிரேக்க மாவீரன் அலெக்சாந்தர், இந்தியப் பெருநிலப் பரப்பு வரையும் படையெடுத்து வந்தது, தன் ஆற்றலை உலகப் பெருவீரர்கள் அனைவரும் அறிந்து பாராட்டவேண்டுமென்ற புகழாசை காரணமாக வந்த போரே ஆகும். அவனைச் சீலம் நதிக்கரையோடு நிறுத்தித் துரத்த வேண்டிப் புருடோத்தம மன்னன் நடத்திய போர், மைந்து பொருளாக வந்தானை வென்றடக்க மேற் கொண்ட போராகும். பண்டைய பேரரசர்கள் அசுவமேத யாகம் செய்ய விரும்பித் தம் பட்டத்துக் குதிரைகளைக் கட்டவிழ்த்து விடுவதும், அவற்றிற்குக் காவலாய் அவற்றின் பின் போகவிட்ட அவ்வேந்தர்களின் படை வீரர்கள், அக்குதிரைகள் புகுந்து ஒடும் நாடுகளிலெல்லாம் தம் வெற்றிக் கொடியினை நாட்டி வருவதும், அம்மன்னர் களின் புகழாசை காரணமான நிகழ்ச்சிகளாம். அவ்வாறு ஓடிவரும் அக்குதிரை, தன் நாட்டு எல்லைக்குள் புகுந்ததும், அதைப் பிடித்துப் பிணித்து விடுவதும் அதன் பின்வரும் வீரர்களை அடித்துத் துரத்தி விடுவதும் மைந்து பொருளாக வந்தானை வென்றடக்கும் நிகழ்ச்சிகளாம். கடல் கடந்த நாட்டு வீரர்கள், தம் ஆற்றல் காட்டக் கடல் கடந்து வருவதும், அவரைக் கடற்கரைகண்ணேயே நிறுத்தி வெல்வதுமே தும்பைத் திணையாம் என்றாலும், காலம் செல்லச்செல்ல நாற்புறமும் நீரால் சூழப்பட்ட ஒரு பெருநிலப் பரப்பிலேயே, ஒரு நாட்டைச் சேர்ந்த வீரன், தன் ஆற்றல் காட்டத் தன் அண்டை நாட்டின் மீதே போர்