பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இ. புலவர் கா. கோவிந்தன் புறப்பொருள் திணைகளுள், வெட்சித் திணையும் ஒன்றாகக் கொள்ளப் பெற்று, ஒரு நாட்டின் மீது போர் மேற்கொள்ளும் வேந்தர், அந்நாட்டின் மீது, தாம் போர் தொடுக்கப் போதலை அறிவிக்கும் வாயில்களுள் ஒன்றாக, அந்நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொள்வதாகப் பாடல் புனைந்து, அவ்வாறு நிரை கொள்ளும் வீரர் அனைவரையும் வெட்சியார் என அழைப்பது வழக்கமாகி விட்டது எனினும், வெட்சித் திணை இயல்பினை விளங்க உணர்ந்தார்க்கு, நிரைகோடல் ஒழுக்கத்தினைப் பண்டு மேற்கொண்டிருந்தவர், பாலை நிலத்தார் மட்டுமேயாவர் என்பது புலனாம். வெட்சி மலர், குறிஞ்சித் திணைக்கோ, முல்லைத் திணைக்கோ முழுவதும் உரிமையுடையத்ாகாது, பாலைத் திணைக்கே உரியதாம். பாலையாவது, முழுவதும் குறிஞ்சி என்றோ, முழுவதும் முல்லை என்றோ கோடற்கியலாது. இரண்டும் கலக்குமிடமாம் என்ப. "வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன், தான் நலம் திருகத் தன்மையிற் குன்றி, முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்இயல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை” (சிலம்பு. காடு காண், 62-66) என்ற பாவடிகளில், இளங்கோவடிகள் படைக்கும் பாலை நிலத்தின் பண்பினை உணர்க. மேலும் பாலையாவது முழுவதும் மலைகளையே கொண்டதோ, முழுவதும் காடுகளையே கொண்டதோ ஆகாது. சிறு மலைகளும், குறுங்காடுகளும் கலக்குமிடமாம் என்பதும் பொருந்தாது. குறிஞ்சியும் முல்லையுமாகிய அந்நிலங்களே மழைபெறா வறுமையால் தம் வளமும் வனப்பும் இழந்து தோன்றும், வேனிற் காலத்தில் பாலை யென்னும் பெயர் பெறும்