பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 267 ஒன்று மட்டுமே யல்லாமல் அவை போல்வனவற்றில் பெறலாகும் சிறப்புக்களும் வெற்றிகளே என்ற உணர்வு எழுந்தது. அவ்வுணர்வு எழுந்த காலத்தவராகிய தொல் காப்பியர், மெய்வலியால் பெறலாகும் சிறப்புக்களோடு அறிவுத் துறையில் பெறும் சிறப்பு, உழவு முதலாம் தொழில்களில் பெறும் சிறப்பு, வரையாது வழங்கும் கொடையால் பெறும் சிறப்பு, அரச வாழ்வையும், அரசு நிகர் பெரும் வாழ்வையும் வெறுத்து வெளியேறும் துறவு நிலையால் பெறும் சிறப்பு, அன்பு, அருள் உடைமைகளால் பெறும் சிறப்பு, பிழைத்தார் பொறுத்தல் போலும் பண்பாட்டு நிலைகளால் பெறும் சிறப்பு, கேடு செய்தார்க்கும் கேடு செய்ய நினையாது, அக்கேடு செய்தார் நாண, உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் போலும் தியாகத்தால் பெறும் சிறப்பு ஆகியவைகளும் வெற்றிகளே யாம் என விதி வகுத்துள்ளார். - வெற்றிக்குத் தொல்காப்பியர் வைத்து வழங்கும் பெயர் வாகை என்பதாம். வாகை, பாலை நிலத்து மர வகையுள் ஒன்று; அதன் முற்றி உலர்ந்த நெற்றுக்கள், அந்நிலத்தில் வீசும் கோடைக் கடுவளியால் அலைப்புண்ட வழி எழுப்பும் ஒலி, பறையொலியோடொத்துப் போர்க்கள நினைவூட்டு மாதலாலும், பறவை இனத்துள் பாராட்டற் குரியதாகிய மயிலுக்கு அம்மாண்பு தருவனவற்றுள் தலையாயது உச்சிக் கொண்டையே ஆதலின், அக் கொண்டைக்கு நிகரான காட்சி நலம் வாய்ந்திருத்தல் கருதி, மக்கள் இனத்துள் உயர்ந்து விளங்கும் வெற்றி வீரர்கள், வாகை மலர் சூடி மகிழ்வதில் ஒரு பொருத்தம் இருப்பதாலும், வெற்றி ஒழுக்கம், வாகை ஒழுக்கம் எனப்பட்டது.