பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 இ. புலவர் கா. கோவிந்தன் வாகை என்ற இப்புறத்திணையைப், பாலை என்ற அகத்திணைக்குப் புறமாகக் கொண்டார் ஆசிரியர் தொல்காப்பியனார். வெற்றி, தனக்கென ஒரு தனி நிலையோ, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்ற இப்புறத்திணை வகைகளுள், ஒரு திணை நிகழ்ச்சிக்கு மட்டும் தனி உரிமையோ உடையதாகாது, அத்திணை களின் முடிவாகவும், அத்திணைகள் அனைத்திற்கும் உரியவாகவும் வரும் ஆதலின், அவ்வெற்றியாம் வாகையைத் தனக்கென ஒரு நிலம் பெறாமல், “முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்!” என்பது போல் முல்லை முதலாம் நிலங்களின் திரிபாகவும், அத்திணை ஒழுக்கங்கள் ஒவ்வொன்றோடும் கலந்திருப்பதாகவும் விளங்கும் பாலை என்ற திணையின் புறத்திணையாகக் கொள்வது சாலவும் பொருத்தமே. இளமைப் பருவம், காமம் காழ்க் கொண்டு நிற்கும் பருவமாம். அவ்வாறு காமம் காழ்க் கொண்டவரிடத்து, அறிவு ஆட்சி செய்வது இயலாது. ஆனால், அவ்வாறு காமம் காழ்க் கொள்ளும் கட்டிளம் பருவத்திலும், கடமை யுணர்வில் பிறழாது நிற்பவர், செயற்கரிய செய்யும் பெரியவராவர். காதலால் கட்டுண்டு கடிமணம் புரிந்து கொண்டு பேரின்பம் நுகர்ந்து வாழும் இளங் காதலருள், இளையவன், "ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு", ஈதலும் இசைபட வாழ்தலுமே உயிர்க்கு ஊதியமாம் என்ற கடமையுணர்வும், "இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருப்போர்க்கு ஆகாது; இல் இருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் பொருள்” என்ற பொருள் அறிவும் உடையனாகிக் காதலையும் மறந்து, காடு மலைகளைக் கடந்து சென்று