பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 275 நிலையில் கிடக்கும் அண்டை நாட்டு எல்லைப்புற நிலங்களைக் கைப்பற்றிக் கொள்வதே எளிதாம் என்ற உணர்வு ஒரு சில அரசர்க்கு உண்டாக, அதன் காரணமாய்ப் பிற நாட்டு எல்லைப்புற நிலங்களைத் கைப்பற்றிக் கொள்ளும் நிலை எங்கும் இயல்புடையதாகி விடவே, வளமார் நாடு பெற்று ஆளும் அரசர்கள், பகைவர் கைப் புகாதவாறு, தங்கள் எல்லைப்புற நிலங்களைக் காத்த வேண்டுவது இன்றியமையாக் கடனாகி விட்டது. அதனால், மன்னர்களின் போர் முயற்சியெல்லாம், பிறர் நாட்டு மண்ணைக் கொள்வதாலும், தங்கள் நாட்டு மண்ணைப் பிறர் கைப்பற்றாவாறு காப்பதாலும் நாட்டு எல்லையை விரிவாக்கும் பணியிலேயே முதற்கண் இடம் பெறுதல் வேண்டும் என்ற உணர்வு அக்கால மக்கள் உள்ளத்திலும், மதி நலம் வாய்ந்த புலவர் பெரு மக்கள் உள்ளத்திலும் ஒரு சேர உருப் பெறவே, அக்கால அரசர்களைப் பாராட்டிய பாராட்டுரைகளுள், அவ்வரசர் களின் எல்லைப் பெருமையே பேரிடம் பெறலாயிற்று. கிழக்கிலும் மேற்கிலும் கடல் நீரையே எல்லையாகக் கொண்ட தமிழ் நாட்டின் மேலைக் கரை நாடாகிய சேர நாடாளும் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கீழ்க்கரை நாடாகிய சோழ நாட்டையும் கைக் கொண்டு பெரு நாடாண்ட பெருமையன் என்பதைப் பாராட்ட விரும்பிய புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர், "உன்னால் உன் உடைமையாக்கப்பட்ட காரணத்தால், பண்டு சோழர்க்கு உரியதாயிருந்தும், இன்று உன் கடலாகிவிட்ட கீழ்க் கடலில் தோன்றும் ஞாயிறு, உன் குல முதல்வராம் சேரர்க்கு இயல்பாகவே உரியதான மேல்கடல் நீரிலேயே மறைவன் . எனப் பாராட்டியுள்ளார்.