பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இ. புலவர் கா. கோவிந்தன் முல்லை நிலத்தின் காட்டுச் செல்வமோ வாய்க்கப் பெறாத வன்னிலம் ஆதலின், ஆண்டு வாழத் தொடங்கியோர், தம் வாழ்க்கைக்காம் வழக்கினைக் காணாராயினர். வயிற்றுப் பசி, அவர்கள் உள்ளத்தில் வற்றாச் சினத்தீயை மூட்டிற்று. அதனால், அவர்கள் பழிபாவங்களை எண்ணிப் பாரா ராயினர். தாம் வாழும் அப்பாலை வழியினைக் கடந்து செல்வார் கொண்டு செல்லும் பொருள்களைக் கொள்ளை யடித்து உண்ணும் கொடியராயினர். பாலையில் ஆறலைத்து வாழும் வாழ்வினை மேற்கொண்டு வாழ்ந்த அம்மறவர், தாம் வேண்டும் பொருளை ஆண்டுப் பெற இயலாக் காலத்தில், அப்பாலையை அடுத்துள்ள நாடுகளுள் புகுந்து கொள்ளையிட்டு வாழும் வாழ்க்கை யினை மேற்கொண்டனர். அப்பாலையை அடுத்து ஒரு பால் குறிஞ்சியும், ஒருபால் முல்லையும் உளவெனினும், குறிஞ்சி அந்நிலத்துவாழ் மக்கட்குத் தேவையாம் பொருள்களைத் தருவதே அரிது; ஆகவே, ஆண்டுவாழ்வார் ஈட்டி வைத்திருக்கும் பொருள் எதுவும் இராது என்பதை, அக் குறிஞ்சியில் ஒரு காலத்தில் வாழ்ந்திருந்தவராய அம் மறவர் அறிவர் ஆதலின், அவர்கள் தமக்குத் தேவையாம் பொருள் குறித்துக் குறிஞ்சி நிலக் குறவர்.பால் செல்லாராயினர். முல்லைநிலத்து மக்களாகிய ஆயர், ஆடு மாடுகளைப் பழக்கி, ஒன்று பலவாகப் பெருக்கிப் பயன் கொண்டு வாழ்ந்திருந்தனர். அதை அறிந்திருந்தார்கள் பாலை நிலத்து மறவர். அதனால் தமக்குப் பொருள் குறைபாடு நேருந்தோறும், முல்லை நிலம் புகுந்து, ஆயர் களின் ஆனிரைகளைக் கைப்பற்றிச் சென்று வாழ்தலை வழக்கமாகக் கொண்டு விட்டார்கள் அம்மறவர்கள். நிரைகோள் ஒழுக்கம் தொடக்கத்தில் தோன்றிய முறை இதுவே.