பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழந்தமிழ் நாட்டு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் தொல்காப்பியர், புறத்திணை இயலில், பழந்தமிழ் மக்கள் மேற்கொண்டு நடத்திய போர் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளார். அத்தொல்காப்பியத்துக்கு உரை கண்ட பழைய உரையாசிரியர்களும், புதுப்புது விளக்கம் கானும் இன்றைய ஆராய்ச்சியாளரும், அன்றைய தமிழகத்தின் சூழ்நிலைகளைப் பின்னணியில் கொண்டு உரை காணத் தவறிவிட்ட காரணத்தால், தமிழர்கள் அறநெறி மறந்த வராகி, வலியார், மெலியார் மேல் செல்வதுபோல், பிறரைச் சென்று தாக்கும் அழிவுப் போரும் மேற் கொண்டனர் எனக்கொண்டு, அதற்கேற்ப, உரை வகுத்துள்ளனர். புறத்திணை இயலை, அவ்வுரைகளின் அடி யொட்டிச் செல்லாமல், அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை உணர்வில் கொண்டு ஆராய்வார்க்கு, அவ்வுரைகள் உண்மையுரைகள் ஆகா, புறத்திணை இயல் விளக்கும் பழந் தமிழ்ப் போர்கள் சென்று தாக்கும் போர்கள் ஆகா; மாறாக, நின்று தாக்கும் போர்களே என்பது தெளிவுறப் புலனாகும்.