பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய அப் பழங்காலத்தில், வாழ்விலும், வளத்திலும், அறிவிலும், ஆண்மையிலும் தமிழினத்தை மிஞ்சிய இனம் வேறு இல்லை. ஆகவே, தம் வறுமையும் பிறர் வறுமையும் காரணமாக எழும் காழ்ப்புணர்வு கொண்டு பிறர்மீது போரிட்டு எழ வேண்டிய நிலை, பழந் தமிழர்க்கு உண்டாகவில்லை. மாறாகத் தாம் பெற்றிருந்த வளமார் பெருவாழ்வு பெற்றிராத பிறர், தம் வளம் கண்டு கொண்ட காழ்ப்புணர்வு காரணமாகத் தம்மீது போர் தொடுத்து வந்த காலை, அவ்வாறு வந்தாரை வென்று ஒட்டுவதற்கே அவர்கள் போர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆகப் பழந்தமிழர் கொண்ட போரெல்லாம் நின்று தாக்கிய போரே அல்லது, சென்று தாக்கிய போர் அன்று. புறத்திணை இயல் கூறும் போர் இலக்கணங்களுக்கு விளக்கம் தரும் எடுத்துக் காட்டுகளாகக் கூறத்தக்க சங்க இலக்கியச் செய்யுட்களை நோக்கிய வழி, அவையும் இக்கருத்திற்கே அரண் செய்வது புலனாம். உண்மை நிலை இதுவாகவும், இவ்வுண்மை நிலைக்கு மாறுபட்டதும், தமிழ் மரபுக்கு மாசு கற்பிக்கத் துணை நிற்பதுமாகிய உரை விளக்கங்களே இன்று கூறப்படுவது உணர்ந்து புறத்திணையியலுக்குப் பொருந்தும் விளக்கவுரை ஒன்று வர வேண்டும் என உணர்ந்தேன். அதன் பயனே இச்சிறு நூல். இந்நூலின் பெரும் பகுதி 1962-ஆம் ஆண்டுக்கு முன்பே முடிவுற்றது என்றாலும், அதன் பிறகு நான் ஏற்றுக் கொண்ட சட்டமன்றப் பணிகள் காரணமாக, இத்துணைக் காலம் கடந்து முழுவடிவம் பெற்று இப்போது வருகிறது.