பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 67 ஆனால், நிரைகோடல், போர் மேற்கொள்ளும் வேந்தர் களின் முதல் நடவடிக்கையாகக் கொள்ளப்பட்ட பிற் காலத்தில் போர் தொடங்குவதை அறிவித்தே தொடங்கின ராதலின், அக்காலை "வெட்சி அரவம்” இடம் பெற்று விட்டது; அதைப் போலவே, போர் ஒழித்த பின்னர் ஆனிரைகளை அவற்றின் உரியவர்.பால் ஒப்படைக்க வேண்டிய நிலை பிறந்து விட்டமையால், அவற்றைக் கேடின்றிக் காக்க வேண்டுவது இன்றியமையாததாகி விடவே, அந்நிலையில், "நோய் இன்றி உய்த்தல்" துறையும் இடம் பெற்று விட்டது. மேலும், பண்டு நிரை கொண்டது, தம் வாழ்வை நிறைவாக்கிக் கோடற் பொருட்டேயாதலின், கைப்பற்றிய நிரைகளைத் தம்மை நச்சி வாழும் பிறர்க்கும் பகிர்ந்து அளிப்பது நிகழவே "பாதிடும்”, “கொடையும்”, அவற்றின் விரிவாம் "புலனறி சிறப்பும்” “பிள்ளை வழக்கும்” பண்டு இடம் பெற்றிருந்தன; ஆனால், படை தொடுப்பதன் முதல் நிகழ்ச்சியாகும் நிரை கவர்தல் என்ற நிலை பிறந்துவிட்ட பிற்காலத்தில் ஆனிரைகளைக் காப்பதே கருத்தாகி விட்ட காரணத்தால், அவற்றைத் தம் உடைமையாக்கிக் கொள்வது ஒழிக்கப்படவே பாதீடு” முதலாம் துறைகள் அக்கால வெட்சியில் இடம் பெறுவது பொருந்தாததாகிவிட்டது. ஆயினும், பண்டு வழக்கிற்கு வராது, பின்னர் வழக்கிற்கு வந்தனவும், பண்டு வழக்காற்றில் இருந்து பின்னர் வழக்கற்றுப் போயினவும் ஆகிய அனைத்தையும் கொண்டு பாடுவதே பாடல் சான்ற புலன் அறிவழக்கமாம் என ஆன்றோர்கள் வகுத்து விட்டமையால், அம்மரபு கருதி அவை அனைத்தும் வெட்சித் திணைக்கண் இடம் பெற்று விளக்கப் பெறுகின்றன.