பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. இ. புலவர் கா. கோவிந்தன் அவற்றைப் பறி கொடுக்காது காக்க வேண்டிய ஓர் இன்றியமையாமைக்கும் உள்ளாயினர். அந்நிலைக்குத் துரத்தப்படவே, அவர்கள் தத்தம் உடைமைகளைத் தனித்தனியே நின்று காத்துக் கொள்ள மாட்டாமை யுணர்ந்து, அவற்றைக் காக்க வென்றே ஒரு தலைவனைத் தேர்ந்து கொண்டார்கள். அவ்வாறு கொண்ட தலைவனின் காக்கும் திறம் கண்டு பாராட்ட எண்ணியபோது, கன்று காலிகளுக்கு உண்டான கேட்டினைக் குன்றெடுத்துக் காத்த கண்ணன் நினைவு அவர்கள் நெஞ்சில் எழவே, ஆனிரை ஒம்பும் அத்தொழில் ஒற்றுமையால் காவலனைக் கண்ணனாகவே கொண்டு பாராட்டுவாராயினர். அதனால் கண்ணன் வழிபாட்டைக் குறித்து நின்ற பூவை நிலைத்துறை, பிற்காலத்தில் காவலனைக் கண்ணனாகக் கொண்டு பாராட்டும் நிலையினைக் குறிப்பதாயிற்று. மேலும் சில காலம் செல்ல, காவலன்பால் காணலாம் சில பல பெருமைகளால், அவன் வேறு பல கடவுளர்களாகவும் கருதப்படும் நிலை பிறக்கவே, அவனை, அக்கடவுளர் களாகவும் கொண்டு பாடும் நிலையினைக் குறிப்பனவும் பூவை நிலையே என்ற மரபு இடம் பெற்றது. - முல்லைக் காட்டு எல்லைக்கண் மலர்ந்திருக்கும் பூவை மலர்க்காட்சியால், அம்முல்லை நிலத் தெய்வத்தை நினைத்து வழிபட்ட நிலையிலேயே பூவை நிலைத்துறை தோன்றியது ஆதலின் ஆசிரியர் தொல்காப்பியனார் அதை அந்நிலத்து ஆயர் ஒழுக்கங்கூறும் கரந்தைத் திணையிடத்தே வைத்தார். பூவை மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்தது எனப் புகழ்தல், நாடெல்லை காடாதலின், அக்காட்டிடைச் செல்வோர் அப்பூவைக் கண்டு கூறுதல்" என்ற இளம்பூரணரின் விளக்கவுரையினையும் காண்க