பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 89 என்னும் தொடர்கள், அரசர் சிலர், பகை நாடுகளுள் புகுந்து, அவர் தம் ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொண்டனர் என்பதையும், ஆடுகோட்பாட்டுச் சேர லாதன், தண்டாரணியம் எனும் காட்டு நாட்டார் கைப்பற்றிச் சென்ற ஆனிரைகளை மீட்டுக் கொணர்ந்தான் எனப் பதிற்றுப்பத்துப் பதிகம் அளிக்கும் நிகழ்ச்சி, பகைவர் கவர்ந்து சென்ற ஆனிரைகளை, அரசர் சிலர் மீட்டுக் கொணர்ந்தனர் என்பதையும் அறிவிக்கின்றனவேனும், அவர்கள், அந்நிகழ்ச்சிகளின் பின்னரும் தொடர்ந்து போரிட்டனர் என அறிவிக்கவில்லை. போர் நிகழ்ச்சி களைக் கூறும் தொல்காப்பியர் முதலாம் பேராசிரியர் களும், போர் இத்தனை வகைப்படும் என்றுதான் கூறினரே யல்லால், போர் நிகழ்வதன் முன், வெட்சியும் கரந்தையும் நிகழ்ந்தே யாதல் வேண்டும் எனக் கூறினாரல்லர். போர் பல காரணங்களை முன்னிட்டு எழும். பொன்னாசையால் எழும் போர், மண்ணாசையால் எழும் போர்; பெண்ணாசையால் எழும் போர்; புகழாசையால் எழும் போர், இவ்வாறு, அது பலவகைப்படும். அவற்றுள் இது, பொன்னாசையின் ஒரு பகுதியாய்ப், பகை நாட்டுப் பொருளெல்லாம் வேண்டும் எனப் பேராசை கொள்ளாது, அவர்தம் ஆனிரைகளை மட்டும் பெற்றால் போதும் என்ற ஆசை காரணமாய் எழுந்த போரும், அதன் பின் விளைவுமாம். இவ்வாறல்லது, வெட்சியும், கரந்தையும் அரசர்கள் பின்னர் நிகழ்த்த இருக்கும் பெரும் போருக்கு அறிகுறியாக, முன் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளாம் எனக் கொள்வது, அத்துணைப் பொருத்தம் உடைத்தன்று. மேலும், வெட்சி, கரந்தைப் போர்கள், அரசர் பின்னர்ப் போரிடற்காம் முன்னேற்பாடாயின், வெட்சி, கரந்தை ஆகிய அவ்விரு போர்களிலும் பங்கு கொண்டு மாண்ட இரு திறத்து வீரர்களும் பாராட்டப் பெறுதல்