பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

நோக்குமிடத்து, இலங்கையிலுள்ள மந்திரசபை அரசனுக் கிணங்க இயங்கியது என்று அறிகின்றோம். இன்னும் இராவணன் ஆணைக்கும் ஆற்றலுக்கும் அஞ்சியே ஒருகால் மக்கள் குரல் எழுப்புவதற்கே பயந்து வாழ்ந்தனரோ என்று கூட ஊகிக்க வேண்டியுள்ளது.

4. சகுனம் பார்த்தல்: இப்பழக்கம் பண்டிருந்தே மக்களிடம் இன்றும் நிலவி வருகின்றது. 1958-60 ஆண்டுகளில் நான் சென்னைப் பல்கலைக் கழகப் பணியில் துழைய முயற்சி செய்ததுண்டு. அப்போது நான் காரைக்குடியில் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பேட்டிக்கு வரும் போதெல்லாம் மயிலை முனிவர் பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் இல்லத்தில் தங்குவதுண்டு. நான் பேட்டிக்குப் போகும்போது புலவர் பெருமான் சகுனம் பார்த்துச் செல்லுமாறு பணிப்பதுண்டு. விளக்கம் தருமாறு வேண்டிய பொழுது ஒற்றைப் பார்ப்பனர், அல்லது பார்ப்பனரல்லாதார் இருவர் எதிர்ப்பட்டால் அவை அபசகுனம் என்றார். அப்படியானால் ஒரு பார்ப்பனர் விளைவிக்கக்கூடிய தொல்லையை இரு பார்ப்பனரல்லாதார் விளைவிக்கும் ஆற்றல் பெற்றவரோ? என்று வினவியபொழுது “நீங்கள் தந்தை பெரியார் கட்சியைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் குறுக்கு வினாவிடுப்பீர்கள்” என்று சொல்லிச் சிரித்து விட்டார். காக்கை கரைந்தால் விருந்தினர்கள் வருவர் என்ற நம்பிக்கையும் ஒரு சகுனம். ஒரு பூனைகுறுக்கே போனால் எதிர்பார்த்துச் செல்லும் காரியம் கைகூடாது என்ற நம்பிக்கையும் உண்டு. இவ்வாறு சகுனம் பார்க்கும் வழக்கம் ஒருவகைப் பண்பாடாக மக்களிடையே நிலைபெற்றுள்ளது. இது காவியங்களிலும் இடம் பெற்று விட்டது.

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாகிய குறுந்தொகையில் நிமித்தம் பற்றிய குறிப்பு உள்ளது.