பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

இன்னும் சூளுரை தொடர்கின்றது. "என் தம்பியை உயிர் நீக்கிய இலக்குவனது குருதிப் பெருக்கை நிலமகள் குடியாவிடில், போரில் எதிர்த்து எனக்கு ஒருமுறை தோற்றவனான இந்திரனுக்கு எனது பெரிய பராக்கிரமம் நான்கு முறை தோற்றது போலாகக் கடவது".

“கொடுந்தன்மையையுடைய குரங்குச் சேனயை தனித்தனியாகத் துண்டுபட்டு முறியும்படி அழித்து இலக்குவனையும் கொல்லாது விடுவேனாயின் என் எதிரில் வருவதற்கும் அஞ்சின திருமால் முதலிய தேவர்கள் என்னைக் கண்டு சிரிக்கட்டும்.”

"கொடிய நாகக்கணையையும் பாசுபதம் என்னும் கணையோடு, சங்கரன் கொடுத்த வாட்படையையும் காத்துக் கொண்டு காலங் கழித்த எனக்கு, இனிமேல் இற்றைநாட் போரில் பயன்படாது வீணாகுமேயானால், எல்லா முயற்சியையும் துறந்து உயிரை விட்டிடுவேன்; சோற்றையும் விரும்பியுண்டு வாழேன்”

"அமிழ்தத்தை யொத்த என் தம்பியின் உயிரைக் கவர்ந்த இலக்குவனை யமனுக்கு விருந்தாகக் கொடாமல், எனக்குப் பழம் பகைவர்களான கடவுள் தேவர்களின் கூட்டம் சிரிக்கும்படி வில்லையும் வீணே சுமந்து கொண்டிருப்பேனானால், நான் அந்த இராவணனது மகன் அல்லேன்' என்று இவ்வாறு வீர வாதம் சொல்லி தந்தையின் அனுமதியுடன் போர்க்கோலம்கொண்டு புறப்படுகின்றான்.