பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 63

நீ நீராடும் காலத்து மேருமலை உன் குதிகாலைத் தேய்க்கும் கல்லாக உதவுவதாக இருக்கும். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நீ இறந்தாயே! அதுவும் ஒரு மானுடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பினால் இறக்க நேர்ந்தது என்ற செய்திதான் தாங்கொனா வருத்தத்தைத் தருகின்றது. மும்மூர்த்திகளின் ஆயுதங்களும் உன்னைத் தீண்டினால் அவை மழுங்கி அப்பாற் போய்விடுமே. அப்படியிருக்க, ஒரு மனிதனுடைய மென்மையான அம்பு துளைத்துச் சென்றதுதான் வியப்பு. இந்நிலையில் நான் பார்த்துக் கொண்டு இருப்பதுதான் இழிநிலை. கரன்முதலிய எம்பிமார் இறந்து போனதும், என் மாமன் மாரீசனார் மாண்டு போனதும், மருந்தனைய தங்கை சூர்ப்பனகை மூக்கறுபட்டதும் நான் ஒரு பெண்ணின் முலையிடத்து வைத்த ஆசைதானே. உன்னை இழந்தும் உயிருடன் இருக்கின்றேன்!

இராமன், அவன் தம்பி இலக்குவன், வானர சேனாதிபதி நீலன், வாணர வேந்தன் சுக்கிரீவன், அவன் மகன் அங்கதன், வாயுமைந்தன் மாருதி, கரடி வேந்தன் சாம்பவான் - இவர்களையெல்லாம் கொன்றாய் என்று சொல்லக் கேட்பேன் என்று இருந்தேன், அங்ங்ணம் கேட்கப் பெறாது நின் மரணம்பற்றிக் கேட்கப் பெற்றேனே! மலரணையில் தங்கி, மகளிர் காலைப் பிடிக்க, தென்றற் காற்று வீசும் நிலையிலிருக்க வேண்டிய நீ போர்க்களத்தில் பேய்கள் துணங்கைக் கூத்தடிக்க புழுதிப் படுக்கையில் உறங்கும் நிலை ஏற்பட்டதே! மதுவை மாந்தி பலதிசை களிலும்சென்று வாழ்ச்சி பெற்றிருக்க நான் சுகமாக உயிர் வாழ்ந்திருந்தேன்; இனி நானும் உன்னைத் தொடர வேண்டியதுதான். இதோ வந்து விட்டேன்",

இங்ங்ணம் இராவணன் கதறியழுவதில் அவனுடைய சகோதர வாஞ்சை வெளிப்படுகின்றது.