பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 85 மரபில் பல மக்கள் தோன்றினர். மனுவின் மரபில் தோன்றியதால் அவர்கள் 'மானவர்கள் என்று அழைக்கப் பட்டனர். இவர்களுள் உத்தானபாதன் என்ற மன்னன் சுனிதி, சுருச்சி என்ற இரு மங்கையரை மணந்து ஆட்சி செலுத்தி வந்தான். இளையவளாகிய சுருச்சியின் மகன் உத்தமன், அரசன் மடியில் அமர்ந்திருந்தான். மூத்தவளான சுனிதியின் மகன் துருவன் தானும் தந்தையின் மடியில் அமர விரும்பினான். அப்படி அமர விரும்பும் போது இளையவளாகிய சுருச்சி அவனைத் தடுத்துவிட்டாள். அரசன் மடியில் அமரும் உரிமை உத்தமனுக்கு மட்டும் என்றும், அடுத்தபடியாக ஆளப் போகிறவன் அவன்தான் என்றும் கூறினாள். மிக்க வருத்தத்தோடு தாயிடம் வந்த துருவன் நடந்ததைக் கூறினான். தாய் சுனிதி 'மகனே! இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. போன பிறப்பில் நல்ல காரியங்களைச் செய்தவர்கள் இந்தப் பிறப்பில் நல்ல பதவிகளையும், செல்வாக்கையும் அடைகின்றனர். சுருச்சியும் அவள் மகன் உத்தமனும் போன பிறப்பில் புண்ணியம் செய்ததால் இப்பிறப்பில் இந்நிலையில் உள்ளனர். நானும் நீயும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இப்பொழுது நல்ல காரியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் நல்ல நிலையை அடையலாம் என்றாள். அதைக்கேட்ட துருவன் தவம் செய்யவேண்டும் என்ற உறுதியுடன் பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சென்றான். அங்கே சப்த ரிஷிகள் என்று சொல்லப்படும் முனிவர்களைச் சந்தித்தான். ஐந்து வயது பாலகனாகிய அவன் காட்டிற்குள் வந்ததைப் பார்த்து வியந்து அவன் வந்த காரணத்தை வினவினர். நடந்த காரியத்தைக் கூறிய துருவன், தான் தவம் செய்து உரிய இடத்தைப் பெறுவதற்கு வந்ததாகக் கூறினான். அவன் முடிவை மாற்ற முடியாது என்பதை அறிந்த முனிவர்கள் உன் எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நீ விஷ்ணுவைக் குறித்துத் தவம்