பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 89 வேண்டும்?' என்று கேட்க, பிரகலாதன், “ஐயனே! இமைப் பொழுதும் உன்னை மறவாதிருக்க வேண்டும்” என்றான். “வேறு என்ன வேண்டும்?” என்று விஷ்ணு கேட்க, "என் தந்தையின் குற்றங்களையெல்லாம் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். விஷ்ணுவும் அவ்விதமே செய்தார். பிற உலகங்கள் பற்றிய குறிப்புக்கள் பூமிக்கு மேல் பல மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, சப்தரிஷி, துருவ மண்டலங்கள் ஆகியவை உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. துருவ லோகத்திற்கு மேல் ஞான உலகமும், அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் தவ உலகமும் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலே சத்திய உலகம் உள்ளது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம், வைகுண்ட லோகம் என்று உள்ளது. பிரம்ம உலகத்தில் பிரம்மனும், வைகுண்ட உலகத்தில் விஷ்ணுவும் உள்ளனர். துருவ உலகம் முதல் சத்திய உலகம் வரை உள்ள நான்கு உலகங்களும் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ புவர், சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன. உண்மையில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு உலகங்களையும் இவற்றிற்குக் கீழே ஏழு பாதாள உலகங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கீழும், மேலுமாக உள்ள இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கி உள்ள அண்டம் இருளால் சூழப் பட்டுள்ளது. அவ்விருளைக் கடந்து தண்ணிரும், நீரைக் கடந்து நெருப்பும், நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.