பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 பதினெண் புராணங்கள் புராணங்கள் தோன்றிய கதை இந்த விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியில் இந்தப் புராணமும், ஏனைய புராணங்களும் தோன்றிய வரிசை சொல்லப்படுகிறது. புராண சம்ஹிதை என்ற மூல நூலை வேதவியாசர் தம் மாணவனாகிய லோமஹர்ஷனருக்குக் கற்றுக் கொடுத்தார். லோமஹர்ஷனரிடம் பயின்ற சுமதி, அக்னிவர்சா, மைத்ரேயு, சவர்னி, அக்ரிதவர்னா, சம்சபயனா ஆகிய ஆறு சீடர்களும் தாங்கள் கற்றுக் கொண்ட புராண சம்ஹிதை யிலிருந்து ஒவ்வொரு புராணத்தை விரிவாகச் சொல்லினர். இந்த அடிப்படையில்தான் விஷ்ணு புராணமும் சொல்லப் பட்டது. பத்ம புராணத்தை அடுத்து வருகிற விஷ்ணு புராணம் விஷ்ணுவின் சிறப்புக்களை விரிவாக எடுத்துக் கூறுகிறது. இப்புராணத்தின்படி ஞானம் பதினான்கு வகைப்படும். இவை நான்கு வேதங்கள், ஆறு வேத அங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணம், தர்ம சாத்திரம் ஆகியவை ஆகும். இந்த பதினான்கோடு, ஆயுர் வேதம், தனுர் வேதம், சங்கீதம், அர்த்த சாஸ்திரம் ஆகிய நான்கையும் சேர்த்துப் பேசுவதும் உண்டு. ரிஷிகளுள் பிரம்ம ரிஷிகள், தேவ ரிஷிகள், ராஜ ரிஷிகள் என்ற மூன்று வகையினர் உண்டு. யமன் கதை உலகத்தில் இறந்தவர்களையெல்லாம் கொண்டு சென்று அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப நரகத்தில் தள்ளி அக் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்கள் அனுபவித்த பிறகு மறுபிறப்பை அவர்களுக்குக் கொடுப்பதுதான் யமனுடைய வேலை. இப்படிப்பட்ட நரக வேதனையை அனுபவிக்காமல் இருக்கவும், யமனிடம் போகாமல் இருக்கவும் ஏதேனும் வழி உண்டா என்று மைத்ரேயு பராசரரைக் கேட்க, தான் ஏற்கெனவே இதுபற்றிக் கேட்ட உரையாடலைப் பராசரர் கூறினார். -