பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பதினெண் புராணங்கள் செய்ய மாட்டான். தனிமையில் அமர்ந்து யோகத்தில் ஈடுபடுவதே அவன் கடமையாகும். அவன் ஒர் இரவுக்கு மேல் ஒரு கிராமத்திலும், ஐந்து நாட்களுக்கு மேல் ஒரு நகரத்திலும் தங்கக் கூடாது. சந்நியாசி நிலையில் உள்ளவன் பிச்சை எடுத்தே தன் உணவை உண்ண வேண்டும். ஆனால் ஒரு வீட்டில் பிச்சை எடுக்குமுன்பு, அவ்வீட்டில் உள்ளவர்கள் உண்டுவிட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டே அவ்வீட்டில் பிச்சை எடுக்க வேண்டும். சடங்குகள் ஒரு குழந்தை பிறந்த பொழுதும், ஒருவன் மரித்த பொழுதும் வெவ்வேறு வகையான சடங்குகள் செய்யப் படுகின்றன. குழந்தை பிறந்த பத்தாம் நாள் தந்தை குழந்தைக்குப் பெயர் சூட்டுகின்றான். திருமணங்கள் எட்டு வகைப்படும். அவை பிரம்மம், தெய்விய, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, காந்தர்வ, ராட்சச பைசாச என்பவை ஆகும். ஒவ்வொரு வர்ணத்திற்கும் குறிப்பிட்ட வகைத் திருமணங்கள் குறிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடவுளை வணங்குதல், பசு, பிராமணர்கள், முனிவர்கள், வயது முதிர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரை வணங்க வேண்டும். திருடுதல், பொய் பேசுதல், பிறரை நோகச் செய்தல் ஆகியவற்றைச் செய்யக் கூடாது. பிறர் குற்றம் கூறக் கூடாது. பிறருடைய செல்வம் கண்டு பொறாமைப்படக் கூடாது. தீயவர் சேர்க்கை கூடாது. தீப்பிடித்த வீட்டிற்குள்ளோ, மரத்தின் உச்சிமீதோ நுழையவும், ஏறவும் கூடாது. வாய் பொத்திக் கொட்டாவி விட வேண்டும். கொடிகளையும், வணக்கத்திற்குரிய தெய்வங்களின் நிழல்களையும் மிதிக்கக் கூடாது. வீட்டிலும் காட்டிலும் தனித்து வாழக் கூடாது. கொடிய விலங்குகள் அருகே செல்லக்கூடாது.