பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii மனித வாழ்க்கையோடு பெரிதும் தொடர்புடைய புராணங்கள் அம்மனிதனுடைய ஆன்மிக வளர்ச்சிக்குத் தேவையான யோகம், தியானம், பிரார்த்தனை என்பவை பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அதே நேரத்தில் இந்த உலகத்தில் செம்மையாக வாழ்வதற்குரிய பல கலைஞானங் களையும், உடலைச் செம்மையாக வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஆயுர்வேதம் முதலிய மருத்துவங்கள் பற்றியும் பேசுகின்றன. இவ் வடமொழிப் புராணங்களைப் பொருத்தமட்டில் பஞ்சலட்சணம் என்று சொல்லப்படும் 5 பகுதிகள் ஒவ்வொரு மகாபுராணத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும். அவையாவன: 1. சர்கா எனப்படும் பிரபஞ்ச உற்பத்தி 2. பிரதிசர்கா எனப்படும் பிரளயத்திற்குப் பின் ஏற்படும் மறு உற்பத்தி 3. வம்ஸா எனப்படும் தெய்வங்கள் சூரியன், சந்திரன் இவர்கள் பரம்பரையினர் ஆகியவர்கள் பற்றிய வரலாறு 4. மன்வந்திரங்களின் தோற்றம், நிலைபெறும் கால அளவு, காலங்களை அளவிடும் முறை, இதுவரை நடைபெற்ற மன்வந்திரங்கள் என்பவற்றைக் கூறுவதுடன் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வைவஸ்வத மனுவின் நடைமுறை 5 வம்ஸானுசரிதா எனப்படும் அரச பரம்பரையினரின் செயல்கள் பற்றி சொல்வன என்பவையாம். எல்லா மகாபுராணங்களும் இவ்வைந்தையும் சுருக்கமாகவும் விரிவாகவும் சொல்வதைக் காணலாம். இந்த ஐந்து இலக்கணங்களும் புராணங்கட்கு இருக்க வேண்டும் என்று சொல்வதைப் பார்த்தால் ஒன்றை அறிந்து கொள்ள முடிகிறது. மனிதனும் அவன் வாழும் இந்தப் பிரபஞ்சமும், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறுபடியும் படைக்கின்ற தெய்வங்களும் ஏதோ தனித்தனியாகக் காணப்படுபவையல்ல என்பதை வலியுறுத்துவதே இப்புராணங்களின் உள்நோக்கமாகும்.