பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பதினெண் புராணங்கள் இருந்தது. யாதவர்கள் தங்களுக்குள் செய்துகொண்ட சண்டை யால் ஒருசில யாதவர்கள் துவாரகையை விட்டு ஓடிவிட்டனர். அவர்களுடன் அக்ருவரும் ஒடிவிட்டான். மணி துவாரகையை விட்டுப் போய்விட்டதால் நாட்டில் கொடிய விலங்குகளும், பஞ்சமும் புகுந்து விட்டன. இதை அறிந்த யாதவர்கள் அக்ருவனைத் திரும்ப நாட்டிற்குள் அழைத்து வந்தனர். நாடு மறுபடியும் செழிப்படைந்தது. இதை அறிந்த கிருஷ்ணன் யாதவர்கள் பலரையும் தன் வீட்டிற்கு அழைத்து அக்ருவனைப் பார்த்துப் பின்வருமாறு பேசினான், “அக்ருவா! உன்னிடத்தில் மணி இருப்பதால் நீ இங்கு இருக்கும் வரை நாடு செழிப்பாக இருந்தது. எனக்கு அந்த மணி தேவையில்லை. நல்லவனாகிய உன்னிடம் இருப்பதுதான் நல்லது. இருந்தாலும் பலராமன் என்மீது சந்தேகப்படுகிறான். அவன் சந்தேகம் நீங்க மணியினை எடுத்து எல்லோரிடமும் காட்டு என்றான். வேறு வழி யில்லாமல் அக்ருவரும் மணியைக் காட்டினான். மணியைப் பார்த்த பலராமன் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென விரும்பினான். தன் தந்தையாகிய சத்ரஜித் தான் அந்த மணிக்குச் சொந்தக்காரர் என்பதால் தனக்குரியது என்று கருதினாள் சத்யபாமா. விவகாரம் போகிற போக்கை அறிந்த கிருஷ்ணன் அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க விரும்பினான். எல்லோரையும் பார்த்து, "இந்த மணி நல்லவர்கள் கையில் இருந்தால் எல்லோருக்கும் நன்மை செய்யும். அல்லாதவர் கைக்குப் போனால் எல்லோருக்கும் கெடுதல் செய்யும். பதினாறாயிரம் பெண்களை மணந்த நான் நல்லவன் அல்லன். என் மனைவி சத்யபாமைக்கும் இந்தக் காரணம் பொருந்தும். நாள் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கும் பலராமனும் நல்லவன் அல்ல. எனவே, இந்த மணி அக்ருவரிடம் இருப்பதே எல்லோருக்கும் நன்மை செய்யும். இதை அவனே வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினான்.