பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பதினெண் புராணங்கள் பெருமானைத் திருப்தி அடையச் செய்வது மிகமிக எளிது. சம்பங்கிப் பூவைத் தவிர வேறு எந்தப் பூ கிடைத்தாலும் அதைச் சிவனுக்கு அர்ப்பணித்தால் அதை அவர் ஏற்று மகிழ்வார்” என்று கூறினார். முனிவர்கள், “அது ஏன் சம்பங்கிப் பூவை சிவன் ஏற்பதில்லை?” என்று கேட்டார்கள். அதற்குரிய நிகழ்ச்சியை லோமஹர்ஷனர் பின்வருமாறு கூறினார். இராம, இலக்குவர்கள் சீதையை அழைத்துக் கொண்டு வனவாசம் வந்தனர். அவர்கள் காட்டில் இருக்கும் பொழுது தசரதன் இறந்துபோன செய்தி அவர்களை எட்டிற்று. உடனே இராமன் இலக்குவனைப் பார்த்து அருகில் இருக்கும் கிராமம் சென்று சிரார்த்தம் செய்யும் பொருள்களைப் பெற்றுவா என்று கூறினார். இலக்குவன் சென்று நெடுநேரம் ஆகிவிட்ட படியாலும், உச்சி நேரத்திற்கு முன், சிரார்த்தத்தைச் செய்து முடிக்க வேண்டும் ஆதலாலும், இராமன் இலக்குவனைத் தேடிச் சென்றான். நெடுநேரம் அவனும் வராமையால் உச்சிக்காலம் நெருங்குவதை அறிந்து சீதாவே சிரார்த்தத்தைச் செய்து முடிக்கச் சென்றாள். பால்கு நதியில் குளித்து விட்டு ஒரு விளக்கை ஏற்றிப் பக்கத்தில் இருந்த சம்பங்கிச் செடியில் இருந்து பூக்களைப் பறித்து சிரார்த்தத்தை முடித்தாள். சிரார்த்தத்தின் முடிவில் ஆகாயத்தில் இரண்டு கைகள் மட்டும் தோன்றி அவள் அளித்த பூக்களை ஏற்றுக் கொண்டன. அசரீரி, "சீதா! நான் மகிழ்ச்சி அடைந்தேன். உன்னை வாழ்த்துகிறேன்” என்று கூறிற்று. சீதாவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தக் கைகளையும், அசரீரியையும் பார்த்து, “நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?’ என்றாள். அசரீரி, 'மருமகளே! நான்தான் உன் மாமனார். நீ சிரத்தையுடன் செய்த இறுதிச் சடங்கை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்’ என்று கூறிற்று. உடனே சீதை, "என் கணவரும், என் மைத்துனரும் இதை நம்ப மாட்டார்களே” என்று கூறினாள். அதற்கு அசரீரி,