பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 499 இதனிடையில், அரண்மனை சென்ற பரிட்சித்து தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் முனிவர் மகன் இட்ட சாபம் அவன் காதுகளுக்கு எட்டியது. தான் இறப்பதற்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன என்பதை அறிந்த அரசன். அந்த ஏழு நாட்களையும் கங்கைக் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானிப்பதில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். தன் மூத்த மகன் ஜனமேஜயனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு, கங்கைக் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானிப்பதற்கு உட்கார்ந்தான். பரிட்சித்துக்குக் கிடைத்த சாபச் செய்தி எங்கும் பரவிவிட, எல்லா முனிவர்களும் அங்கே கூடிவிட்டனர். வேதவியாசரின் மகனும், பதினைந்தே வயது நிரம்பியவருமாகிய சுகதேவமுனிவர் உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டவுடன் ஏனைய முனிவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தி அவரது ஆசி பெற்றனர். சுகதேவ முனிவரை வணங்கி, பரிட்சித்து மன்னன், “முனிவரே! சாவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவன் கேட்க வேண்டிய ஒன்று எது? தயை கூர்ந்து அதனைச் சொல்லி அருள்க” என்று கூறியவுடன், சுகதேவ முனிவர் சொல்லத் தொடங்கினார். விஷ்ணுவின் கற்பனை கடந்த வடிவம் உலகத்திலுள்ள மக்கள் பலரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கின்றனர். வீடு, மக்கள், செல்வம் என்ற உலகாயதப் பொருள்கள் “மாயை' என்று தெரியாமல் அவற்றையே சதம் என்று நம்பியுள்ளனர். உண்மையில் அறியப்பட வேண்டிய பொருள் எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவேயாகும். இந்த மாயையில் ஈடுபடாமல், விஷ்ணுவை தியானிக்க விரும்புபவர்