பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பதினெண் புராணங்கள் இதன் பிறகு இதே கோலத்துடன் மிருகண்டு முனிவர் முன் விஷ்ணு தோன்றினார். இந்தக் கோலத்தை தரிசித்த மிருகண்டு முனிவர் விஷ்ணுவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். "ஐயனே! தேவர்கள் முதலானவர்கள் உன்னைத் தரிசிப்பதற்குத் தவம் கிடக்கிறார்கள். அவர்களால் காண்பதற்கரிய நீ என்னை நாடி வந்தது. என் முன்னே நிற்பது என் மிகப் பெரிய பேறாகும்” என்றார். விஷ்ணு, “முனிவரே! உன் தவத்தை மெச்சினோம். வேண்டிய வரத்தைக் கேட்பாயாக!” என்றார். முனிவர் ‘ஐயனே! தங்களை நேரே தரிசனம் செய்யும் பேறு கிடைத்த பிறகு இதைவிட மேலான ஒன்று எதுவும் இல்லை. ஆதலால் எனக்கு எந்த வரங்களும் தேவை இல்லை. தங்கள் தரிசனம் ஒன்றே போதுமானது" என்றார். விஷ்ணு, “முனிவரே! ஒரு பக்தனிடம் விஷ்ணு சென்றார், ஆனால் வரம் ஒன்றும் தரவில்லை என்ற பெயர் எனக்கு உண்டாக வேண்டாம் நீயே கேட்காவிட்டாலும், நானே ஒரு வரத்தைத் தரப்போகிறேன். உம்முடைய வம்சத்தில் நான் வந்து தோன்றப் போகிறேன். அது உம்முடைய வம்சம் செய்த பெரும் புண்ணியமாகும்” என்று கூறிவிட்டு மறைந்தார். மார்க்கண்டேயர் விஷ்ணுவின் அருளால் மிருகண்டு முனிவரின் புத்திர னாகப் பிறந்தார். மிகவும் இளம் வயதிலேயே வேதங்கள், சாத்திரங்கள் அனைத்தையும் பயின்று விற்பன்னராகிவிட்டார். மார்க்கண்டேயர் பிரளய காலத்தில் நீரின் மேல் படுத்துக் கிடக்கும் வாய்ப்பைப் பெற்றார். பல்லாயிரக்கணக்கான வருடங்கள் இப்படியே நீரில் மிதந்தமையால், நீரைக் கண்டு ஒருவித அச்சமடைந்தார். அந்நிலையில் விஷ்ணு அவர் முன் தோன்றி, "நீ என்னுடைய சிறந்த பக்தன், உன்னைக் கைவிட மாட்டேன்” என்று கூறிவிட்டு, விஷ்ணு பக்தர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று சில அடையாளங்களைக் கூறினார்.