பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 295 மகாமதி, 'சுமதி! உடனடியாக வெளி உலகிற்குச் சென்று ஒரு குருவைத் தேடிக்கொள். வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுக் கொள். பிறகு ஒரு பெண்ணை மணந்து குழந்தை பெற்ற பிறகு காட்டிற்குச் சென்று தவம் செய்து, பிரம்ம ஞானம் பெற முயற்சி செய்” என்று அடிக்கடி கூறி வந்தார். பல நாட்கள், பலமுறை மகாமதி கூறியதைக் கேட்டு ஒரு நாள் மகன் சுமதி, வாய் திறந்து பேச ஆரம்பித்தான். "தந்தையே! தாங்கள் சொல்லும் பிரம்ம ஞானத்தை என்றோ அடைந்து விட்டேன். இப்பிறப்பில் உங்கள் மகனாக இருக்கின்ற நான் இதற்கு முன்னர் எத்தனையோ பிறப்புகள் எடுத்து உள்ளேன். புழுவில் தொடங்கி, விலங்குவரை பிறந்து, அதற்கு மேல் நான்கு வர்ணத்திலும் பல பிறவிகள் எடுத்துள்ளேன். நூற்றுக்கணக்கான தாய் தந்தையர், நூற்றுக்கணக்கான மனைவியர், ஆயிரக்கணக்கான நண்பர்கள் பகைவர்கள் ஆகியவர்களோடு பல பிறவிகள் வாழ்ந்துள்ளேன். பலரைக் கொன்றுள்ளேன். பலரால் பலமுறை கொல்லப்பட்டேன். ஒரு சில பிறப்புகளில் நல்ல குருமார்களைப் பெற்று வேத, சாஸ்திரங்களைப் பயின்றுள்ளேன். இப்பிறப்பில் அதிர்ஷ்ட வசமாக ஜதீஸ்மரா சக்தி எனக்குக் கிடைத்திருப்பதால், என் பழம் பிறப்புகளை எல்லாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. எனவே இப்பிறப்பில் புதிதாக ஒரு குருவைத் தேடிச் சென்று எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. முந்தைய பிறப்புகளில் கற்றுக் கொண்ட வேத சாஸ்திர அறிவு என்னுள் நிறைந்துள்ளது” என்று கூறினான். அதிசயத்தால் வாயடைத்து நின்ற மகாமதி, மகனுடைய பழம்பிறப்புகளில் சிலவற்றையும், அப்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளையும் கேட்டு அறிந்து கொண்டான்.